சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூன் 3-ம் தேதி ஜாமீன் வழங்கிவிட்டதால், ஜாமீன் கோரி பேராசிரியர் ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை திரும்பபெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி ஒருவர், அடையார் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார்.அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கல்லூரியின் நடனத்துறை உதவிப் பேராசிரியரான ஹரிபத்மனை ஏப்.3-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மே முதல் வாரம் ஹரிபத்மன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்தது. இதையடுத்து ஹரிபத்மன் வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி மீண்டும் அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஹரிபத்மன் தரப்பில், சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூன் 3-ம் தேதி தனக்கு ஜாமீன் வழங்கி விட்டதாகவும், எனவே, இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கி விட்டதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.