தமிழகம்

“ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சிப்பது முதல்வரை அல்ல, பிரதமரைத்தான்” - ரவிக்குமார் எம்.பி கருத்து

அ.முன்னடியான்

புதுச்சேரி: “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சிப்பது தமிழக முதல்வரை அல்ல, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களைத்தான் அவர் விமர்சிக்கிறார்” என்று ரவிக்குமார் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை, விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனு ஒன்றையும் அவர் அளித்தார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அமைப்பு செயலாளர் தலையாறி, தொண்டரணி செயலாளர் பொதினி வளவன், நிர்வாகி செல்வநந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரவிக்குமார் எம்.பி. கூறியது: ''இந்திய அளவில் எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், புதுச்சேரி மாநில அளவில் எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அமைக்கப்படவில்லை. புதுச்சேரியில் 16 சதவீதம் எஸ்.சி மக்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்புகள் வழங்கப்படுவதில் சிக்கல் இருக்கிறது. தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021-ம் ஆண்டு அறிக்கையில் புதுச்சேரியில் 2019-ல் 4 வழக்குகளும், 2020-ல் 9 வழக்குகளும், 2021-ல் 7 வழக்குகளும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த 20 வழக்குகளும் விசாரணை நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய குறைபாடுகளை நீக்குவதற்கு மாநில அளவில் எஸ்.சி., எஸ்.டி ஆணையம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நிச்சயமாக ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

அதேபோல், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காலமுறைப்படி கூட்டக்கூடிய கண்காணிப்புக் குழு கூட்டங்கள் முதல்வர் தலைமையிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்பட வேண்டும். அவையும் சரியாக நடத்தப்படவில்லை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பி பெற்ற தகவலில் தெரியவந்தது. அதையும் இங்கு சுட்டிக்காட்டினேன். அதனையும் செய்வதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி மாணவர்கள் யுபிசிஎஸ் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது.

பல லட்சம் ரூபாய் செலவு செய்து பல ஆண்டு பயிற்சி அளித்தாலும், முதல்நிலை தேர்வில் கூட இளைஞர்கள் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, டெல்லியில் உள்ள சிறந்த நிறுவனங்களை இளைஞர்களை சேர்ந்து, அதற்கான கட்டணத்தை அரசு செலுத்தினால் ஆண்டுக்கு 5 முதல் 10 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்க முடியும் என்ற கோரிக்கையையும் முதல்வரிடம் வைத்தோம். அதற்கு இளைஞர்கள் முன்வந்தால் 50 மாணவர்களுக்கு கூட செலவு செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்'' என்றார்.

அப்போது தமிழக முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்த்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எம்பி ரவிகுமார், “அவர் (ஆளுநர்) ஏன் தமிழக முதல்வரை பற்றி விமர்ச்சிக்கிறார் என்று சொல்கிறீர்கள். அவர் பிரதமரைத்தான் விமர்சிக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், பிரதமர்தான் கடந்த 9 ஆண்டுகளாக அதிகமாக வெளிநாடு பயணம் சென்றுள்ளார். நான் முதலீடுகளை ஈர்க்கத்தான் சென்றேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார். தற்போது தமிழக ஆளுநரே பிரதமரை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இது என்ன அரசியல் என்று புரியவில்லை.

தமிழக ஆளுநர் மாளிகையை அரசியல் மையமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. ஆளுநர் அறைகுறையாக படித்து கொண்டிருக்கும் நேரத்தில், சிறிது நேரம் ஒதுக்கி அரசியலமைப்பு சட்டத்தையும் படித்தால், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும், அவருக்கும் நல்லது” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT