தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு - முதல்வருடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 14-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர், ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

எனினும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் இதர அலுவலகப் பணிகளை கவனிப்பதற்காக ஆசிரியர்கள் கடந்த ஜூன் 1-ம் தேதி முதலே, சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி (ஞாயிறு) சென்னை உட்பட பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் குறையாததால், அறிவித்தபடி ஜூன் 7-ல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார். அறிவிக்கப்பட்டபடி ஜூன் 7-ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா அல்லது பள்ளிகள் திறப்பை சற்று தள்ளிவைக்கலாமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், விடுமுறை நீட்டிக்கப்படும் நாட்களை சனிக்கிழமை வேலைநாளாக வைத்து சரிசெய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ‘‘6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 14-ம் தேதி திறக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT