தமிழகம்

பள்ளி கல்வியில் 7 இணை இயக்குநர்கள் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக நலன் கருதி, இணை இயக்குநர் மற்றும் அதையொத்த பணியிடங்களில் 7 பேருக்கு மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் த.ராஜேந்திரன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இணை இயக்குநராகவும் (பணியாளர் பிரிவு), ஏற்கெனவே இந்தப்பதவியில் இருந்த பி.ஏ.நரேஷ்மாற்றப்பட்டு அரசுத் தேர்வுகள் இணை இயக்குநராகவும் (இடைநிலை) நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) எஸ்.கோபிதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராகவும், ஏற்கெனவே இந்தப் பதவியில் இருந்த எஸ்.ராமசாமி மாற்றப்பட்டு, தனியார் பள்ளிகள் இணை இயக்குநராகவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் கே.சசிகலா மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இணை இயக்குநராகவும் (இடைநிலை), ஏற்கெனவே இந்தப் பதவியில் இருந்த கே.செல்வகுமார் மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (எஸ்எஸ்ஏ) இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் எஸ்.சுகன்யா மாற்றப்பட்டு, தொடக்கக் கல்வி இணை இயக்குநராக (நிர்வாகம்) பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT