தமிழகம்

500 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடல் | ஒரு வாரத்தில் அறிவிப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத் துறை மானியக்கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்படும் என தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 5,329 டாஸ்மாக் மதுபானக்கடைகளில், விதிகளுக்கு அப்பாற்பட்டு அதாவது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்கு உள்ளே இருக்கும் கடைகள், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகளை கணக்கெடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.

அதன்படி மாநிலம் முழுவதும் மூடப்பட வேண்டிய கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, ‘‘மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியல்தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒருவாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகம்முழுவதும் பாதுகாப்புக்காக மதுபானக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT