சென்னை: சென்னை அசோக் நகர் வாசுதேவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன்(47). தனியார் ஐடி ஊழியரான இவர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை முகுந்தனின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலம் உருவானது.
விழித்தெழுந்த முகுந்தனின் குடும்பத்தினர், கரும்புகை பரவியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புகையினால் வெளியேற முடியாமல் கூச்சலிட்டனர். அவர்களின் கூக்குரலைக் கேட்டு, தரை தளத்தில் இருந்த முகுந்தன், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து, அவர்களை மீட்க முயன்றார். ஆனால் தீ மற்றும் புகை மண்டலமாக இருந்ததால் வீட்டுக்குள் அவர்களால் செல்ல முடியவில்லை.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் மற்றும் தி.நகர் தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.
தொடர்ந்து, உள்ளிருந்தவர்களை ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர் தீயையும் முழுவதுமாக அணைத்தனர்.
ஏசியில் மின்கசிவு காரணம்: முதல்கட்ட விசாரணையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. விபத்தின்போது தூக்கத்திலிருந்து உடனடியாக சுதாரித்து எழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.