சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் ரெமா சந்திரமோகன் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும். இந்த மருத்துவமனையை பிளாஸ்டிக் பைகள் இல்லாத மருத்துவமனையாக மாற்றுவதற்காக, தமிழக சுற்றுச்சூழல் துறை உதவியுடன் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் 250 பைகளை வைக்க முடியும். மருத்துவமனைக்கு வருபவர்கள் 10 ரூபாய் நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தினால் மஞ்சப்பை வெளியே வந்துவிடும். பொதுமக்கள் நிறைய பேர் இந்த இயந்திரத்தின் மூலம் மஞ்சப்பையை பெற்றுச் செல்கின்றனர். பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டுள்ள மஞ்சப்பை தரமானதாகவும், பொருட்களின் எடையைத் தாங்கும் வகையிலும் உள்ளது. அதனால், மஞ்சப்பைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.