கடலூர்: கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘இந்து தமிழ் திசை' உங்கள் குரல் பகுதியில் வாசகர்கள் பலர் புகார் பதிவு செய்திருந்தனர்.
இதுதொடர்பாக விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடதுகரை சுமார் 61 கிமீ ஆகும். சிதம்பரம் அருகே உள்ள சின்னகாரைமேடு முதல் அணைக்கரை வரை இந்த சாலை உள்ளது. இந்த கொள்ளிடக்கரை சாலையோரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. போக்குவரத்து செல்ல முடியாமல் குண்டும், குழியுமாக இருந்த இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.108 கோடியில் நீர்வளத்துறையால் சாலை அகலப்படுத்தப்பட்டு, பல இடங்களில் வெள்ள தடுப்பு சுவர் மற்றும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு, மண் சாலையாக இருந்த இந்த சாலை, தார் சாலையாக மாற்றப்பட்டது.
இதனால் இந்த சாலையோரத்தில் உள்ள கருப்பூர், நளன்புத்தூர், முள்ளங்குடி, கீழப்பருத்திக்குடி, மேலப்பருத்திக்குடி, வெள்ளூர், குருவாடி, தில்லைநாயகபுரம், ஓமாம்புலியூர், எய்யலூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெளியூர் சென்று வர தரமான சாலை வசதி கிடைத்தது.
இதில் சிதம்பரத்தில் இருந்து வெள்ளூருக்கும், மேலப்பருத்திக்குடிக்கும் இரண்டு மினி பேருந்து கள் இயக்கப்பட்டன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு இந்த சாலை பேருதவி புரிந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலையில் சீரமைப்பு பணிகள் செய்யப்படாததால் சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலையில் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கின்றன.
மேலும் கரைகளில் பல இடங்களில் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை ஓரத்தில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலை முழுவதையும் சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த சாலையை முழுமையாக சீரமைத்து பழையபடி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கொள்ளிடக் கரையோரத்தில் உள்ள 30 கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில், “கொள்ளிடம் ஆற்றின் இடதுகரை சாலையை முழுமையாக சீரமைக்க ரூ.150 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்வாக அனுமதி வழங்கிய பிறகு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்” என்றார்.