புதுச்சேரி: புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டி ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. கடந்த 1733-ம் ஆண்டு முதல் 1764-ம் ஆண்டு வரை ஹோட்டல் இங்கு இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பில் இவ்விடம் சேதமாக்கப்பட்டது. பின்னர் 1761-ல் மீண்டும் கட்டுமானம் செய்யப்பட்டு, 1954-ம் ஆண்டு வரை பிரெஞ்சு தலைமை கமிஷனர் அலுவலகமானது.
புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பிறகு 1963-ம் ஆண்டு முதல் துணை நிலை ஆளுநர் மாளிகையாக ராஜ்நிவாஸ் உள்ளது. ராஜ் நிவாஸில் ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட் டவை செயல்பட்டு வருகிறது.
சுமார் 250 ஆண்டு பழமையான ராஜ் நிவாஸ் கட்டுமானம் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் விசாரித்தபோது, "ராஜ்நிவாஸ் முதல் தளத்தில் கட்டுமானம் சேதம் அடைந்துள்ளது. காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. மழை நீர் ஒழுகுவதும் நடக்கிறது.
கட்டிட உறுதி தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆளுநர் மாளிகையை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ராஜ்நிவாஸ் சேதமாக உள்ளதால் வேறு இடம் மாற்ற பரிந்துரையை அரசு ஆளுநர் மாளிகை கேட்டிருந்தது.
அதையடுத்து, கடற்கரைச்சாலையில் கட்டப்பட்டுள்ள நீதிபதிகள் தங்கும் குடியிருப்பில் ஆளுநர் தங்கவும், ஆளுநரின் அலுவலகம், ஆளுநர் செயலகம் ஆகியவை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேரி நகராட்சி கட்டிடத்தில் செயல்படவும் முடிவு எடுத்தனர். இதுதொடர்பான பரிந் துரையை ஆளுநர் மாளிகை தரப்பில் ராஜ்நிவாஸ் அரசுக்கு அனுப்பியுள்ளது.
இதுதொடர்பான கோப்பு முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதுபற்றி முதல்வர் முடிவு எடுக்கவுள்ளார்" என்றனர். பழமையான ராஜ்நிவாஸை எவ்வகையில் புதுப்பிப்பது என்பது பற்றியும் விரைவில் முடிவு எடுக் கப்படவுள்ளது. மேரி கட்டிடம் நகராட்சிக்கு உரியது.
கடந்த இரண்டேகால் ஆண்டு களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தும் இக்கட்டிடம் செயல்படாமல் இருந்தது. இக்கட்டிடத்தை நகராட்சிக்கு ஒப்படைக்க கோரியும், இதுவரை தரப்படாத நிலையில் இங்கு ஆளுநர் செயலகம் வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.