சேலம்: சேலம், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி ஒன்றியங்களைச் சேர்ந்த மக்களின் நீண்ட கால கனவை நிறைவேற்றிடும் வகையில் ரூ.652.84 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள காவிரி குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வழியாக காவிரி ஆறு பாய்ந்தும், மேட்டூர் அணை இருந்தும் கூட, காவிரி நீர் மாவட்டம் முழுவதும் கிடைப்பதில்லை என்பது மாவட்ட மக்களின் மனக்குறையாக உள்ளது. இந்நிலையில், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக, சேலம் மாவட்ட மக்களின் தாகத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
அதில், சேலத்தை அடுத்த வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 778 கிராமங்கள், இடங்கணசாலை நகராட்சி, பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, வீரபாண்டி ஆகிய பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீரை வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமானது, நபார்டு வங்கியின் உதவியுடன் ரூ.652.84 கோடி மதிப்பில் இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, காவிரி பாயும் பூலாம்பட்டியில் கோரணம்பட்டி என்ற இடத்தில் முதன்மை நீரேற்று நிலையம், அதைத் தொடர்ந்து ஏகாபுரத்தில் கூடுதல் நீரேற்று நிலையம் ஆகியவற்றின் மூலம் காவிரி நீர் உறிஞ்சப்பட்டு, பனமரத்துப்பட்டி அருகே கல்பாரப்பட்டி பொதிலியன்குட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு 32 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மிகப்பெரிய தொட்டிகளில் நீர் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. பின்னர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க வசதியாக, 32 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரிய தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியது: கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மக்களுக்கு தினமும் 53.32 எம்எல்டி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. திட்டம் சார்ந்த பகுதிகளுக்கு படிப்படியாக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டம் சார்ந்த பகுதிகளில், அடுத்த 30 ஆண்டு கால மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்றனர்.
காவிரி நீர் சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீராக வழங்கும் திட்டத்தால், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஊராட்சி ஒன்றிய மக்களும், இடங்கணசாலை நகராட்சி மக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.