மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.155 கோடியில் அமையும் புதிய டவர் பிளாக் கட்டிடத்தின் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளதால், ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தென் தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ.110 கோடியில் 23 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் அமைகிறது.
ஜப்பான் நாட்டின் ‘ஜைக்கா’ நிறுவனம் உதவியுடன், மதுரை அரசுமருத்துவமனைக்குத் தேவையான புதிய அறுவை சிகிச்சை (ஆபரேஷன் தியேட்டர்) அரங்குகள், அதிநவீன மருத்துவ கருவிகள், புதிய சிகிச்சை அறைகள் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்பு சர்வதேசத் தரத்தில் கட்டமைக்கப்படுகின்றன.
இந்த சிகிச்சை அரங்குகள், மருத்துவ உபகரணங்கள் ஒரே கட்டிடத்தில் அமையும் வகையில் மருத்துவமனை டீன் அலுவலகம் அருகே பனகல் சாலையில் ரூ.155 கோடியில் 7 தளங்களுடன் கூடிய ‘டவர் பிளாக்’ கட்டுமானப்பணி 2021-ம் ஆண்டு தொடங்கியது. இந்த கட்டிடத்துக்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டிய பழையமுகப்புக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டபோது பாரம்பரிய கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தக் கட்டிடம் கட்டத்தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளன. ஆகஸ்ட் மாதம், கட்டுமானப்பணி நிறைவுபெற்று திறப்பு விழா நடக்க உள்ளது. மருத்துவ உபகரணங்கள் மட்டும் ரூ.110 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம்ரூ.265 கோடியில் இந்த கட்டிடம்அமைக்கப்பட்டுள்ளது. கீழ்த்தளம் 3,996.15 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அதன் அடிப்படையிலே 7 தளங்களும் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 22,580.90 சதுர மீட்டர் பரப்பில்தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு மேலான வகையில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நோயாளிகள், ஒவ்வொரு சிகிச்சைக்கும், பரிசோதனைக்கும் அலைக்கழிக்கப்படுவதைத் தவிர்க்க இந்த ஒரே கட்டிடத்தில் 22 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைகின்றன. தென் தமிழகத்தில் முதல் முறையாக, 23 சிகிச்சைஅரங்குகள் ஒரே கட்டிடத்தில் அமைக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘டீன்’ ரத்தினவேலுவிடம் கேட்டபோது, ‘மருத்துவமனைக் கட்டிடம் ஆகஸ்ட் மாதம் திறக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
வாகனக் காப்பக வசதி இல்லை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே நோயாளிகள், உதவியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நிறுத்தும் வாகனங்களால் பனகல் சாலையில் நெரிசல் உள்ளது.
மருத்துவமனைக்குள் நிறுத்தவசதியில்லாமல் மருத்துவமனைக்கு வெளியே சாலையோரம் தங்கள் இரு சக்கர வாகனங்களை பாதுகாப்பு இல்லாமல் நிறுத்துகின்றனர். இவர்கள் நிறுத்தும் வாகனங்களை ‘பைக்’ திருடர்கள் அடிக்கடி திருடிச் செல்கின்றனர். காவல்நிலையத்தில் சென்று புகார் தெரிவித்தால், உங்களை யார் சாலையில் நிறுத்தச் சொன்னது என போலீஸார் கேள்வி எழுப்புகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வசதியிருந்தால் அவர்கள் எதற்குச் சாலையில் நிறுத்தப்போகிறார்கள். இந்தச் சூழலில் வாகனங்களை நிறுத்த வசதி இல்லாதநிலையில்
7 தளங்களுடன் கூடிய ‘டவர் பிளாக்’ கட்டிடம் அமைகிறது. உள்ளூர் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ-க்கள், இதுவரை இந்தக் கட்டடிடத்தின் கட்டுமானப்பணியை நேரில் சென்று பார்க்கவில்லையா? பார்க்கிங் வசதியை ஏற்படுத்த பரிந்துரைக்கவில்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.