சென்னை: தமிழகத்தில் நேற்று 17 நகரங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 108 டிகிரி, வேலூர், திருத்தணியில் தலா 106,மதுரை விமான நிலையம், புதுச்சேரியில் தலா 105, மதுரை, நாகப்பட்டினம், கடலூரில் தலா 104, கரூர் பரமத்தியில் 103, ஈரோடு, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், சேலம், திருச்சியில் தலா 102, காரைக்கால்,
பாளையங்கோட்டையில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. 9 இடங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூன் மாத வெயில் நிலவரப்படி கடந்த 100 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலை இதுவாகும். கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக, 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி 107 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு சென்னையில் பதிவான வெயில் அளவுகளில் இதுவே அதிகபட்சமாகும்.
இன்று 7 டிகிரி அதிகரிக்கும்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன் ஹீட் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.