பழநி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளையொட்டி, அவரது ஓவியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை வைத்து வரைந்து பழநி ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள குபேரபட்டினத்தைச் சேர்ந்தவர் பா.அன்புசெல்வன். இவர், சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலினின் சிறிய அளவிலான 2 ஆயிரம் உருவப் படங்களை கொண்டு பெரிய அளவில் கருணாநிதியின் ஓவியத்தை வரைந்துள்ளார்.
இது, காண் போரை கவர்ந்து வருகிறது. மேலும் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவு கூரும் வகையில், 100 பேனாக்களை வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து அன்பு செல்வன் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை 3 செ.மீ. அளவில் 2 ஆயிரம் பிரின்ட் எடுத்து, அவற்றின் மூலம் 4 அடி உயரம், 3 அடி அகலத்துக்கு கருணாநிதியின் ஓவியத்தை வரைந்துள்ளேன். இந்த ஓவியத்தை தயார் செய்ய ஒரு வார காலமானது.
பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுவர் என, திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இந்த வாக்குறுதியை கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.