தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம் 
தமிழகம்

ஒடிசா ரயில் விபத்து: ஆளுநர் தமிழிசை இரங்கல்; இன்றைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்

அ.முன்னடியான்

புதுச்சேரி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி அரசு சார்பில் மாஹேயில் அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்,ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு இரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

விபத்து நடந்த உடனே ரயில்வே துறையுடன் இணைந்து மீட்பு பணிக்கு உதவிய உள்ளூர் மக்கள்,
விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்ததானம் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வரும் ஒடிசா மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும். தழைக்கட்டும் மனிதநேயம்.

ரயில்வே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி அரசு சார்பில் மாஹேயில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT