பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக நிழற்குடை அகற்றப்பட்டதால், கொளுத்தும் வெயிலில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள். படங்கள்:எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமையுமா?

செய்திப்பிரிவு

பெருங்களத்தூர்: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் இருப்பதால் பேருந்துகள் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதும், இறக்கி விடுவதுமாக உள்ளன. அதிகப் போக்குவரத்தால் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் இந்த சாலையில் ரூ.234 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, வண்டலூரில் இருந்து தாம்பரம் வருகின்ற மேம்பாலம் பாதையில் ஒரு பகுதி திறக்கப்பட்டது. தற்போது தாம்பரத்தில் இருந்து வண்டலூர் செல்லும் மார்க்கத்தில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் ஏற்கெனவே இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டு விட்டன. இதனால் தற்போது அடிக்கும் கோடை வெயிலில் மக்கள் அங்கு நிற்க முடியாமல் தவிக்கின்றனர்.

வெளியூர் செல்லும் மக்கள் பெரும்பாலும் பெருங்களத்தூர் வந்து செல்கின்றனர். மேலும் கழிப்பறையும் இல்லாததால் அவசரத்துக்கு கூட சிறுநீர் கழிக்க முடிவதில்லை. இதனால் பகல், இரவு நேரங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்த மேம்பால வேலை முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும். அதனால் பேருந்து நிறுத்தத்தை அதே மார்க்கத்தில் வேறு இடத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தமாக உருவாக்கி மின்விளக்கு, குடிதண்ணீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது, கொளுத்தும் வெயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர் சிரமப்படுகின்றனர். தற்காலிக நிழற்குடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT