சென்னை: கருணாநிதி திறமையான அரசியல்வாதி மட்டுமல்ல; நிர்வாகத்தில் ராஜதந்திரியாகவும் திகழ்ந்தார் என்று மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, அதற்கான இலச்சினையை (லோகோ) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுசென்னை கலைவாணர் அரங்கில்நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். இவ்விழாவில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:
காந்தி, ராஜாஜி பெயர்களைக் காப்பாற்றுவது என்பது மிகப் பெரிய வேலை. நான் அதற்கு முயற்சி செய்யவில்லை. நான் காந்தியுடன் தொடர்புடையவன் என்பது தற்செயலானது. நான் காந்தியவாதி இல்லை. சாதாரண இந்தியக் குடிமகன். நான் அரசுப்பணியில் சேர்ந்தபோது, தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தார். அந்த நேரத்தில் தற்போதைய முதல்வருக்கு 15 வயதுஇருக்கும். தற்போது கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும்போது, முதல்வராக அவரது மகன் உள்ளார்.
பொதுவாழ்வில் பக்குவம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரை பொது வாழ்வில் பக்குவம், ஆட்சி நிர்வாகத்தில் நிதானம், சமநிலை தவறாத தன்மையுடையவர். அவர் திறமையான அரசியல்வாதி மட்டுமல்ல; நிர்வாகத்தில் ராஜதந்திரியாகவும், கலைஞானம் கொண்டவராகவும் இருந்தார். ஆட்சி செலுத்துவதில் நுணுக்கமும், பகுத்தாய்வு செய்யும் திறனையும் பெற்றிருந்தார்.
அரசியலில் சிறந்த கலாச்சாரத்தைப் பின்பற்றியவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடல்நலன் குன்றியிருந்தபோது, அவர் உடல்நலன் பெற வேண்டுவதாக கருணாநிதி கூறினார். ஆனால், தற்போது அரசியல் எனப்படும் பொது வாழ்வு, நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ளது.
தனித்துவம் மிக்கவர்: மக்களின் வாக்குகள், அதிகாரத்தை பகட்டுப் பொருளாக்கி, அதை காட்சிப்படுத்துவதற்காக அல்ல. நமது கடமைகளை சரியாகச் செய்வதும், பொது சொத்துகளை அறக்கட்டளை சொத்துகள் போல காப்பதற்காகவும்தான். ஆட்சியில் உள்ள ஒவ்வொரு நிமிடத்தையும் புனிதமாகக் கருத வேண்டும்.
அரசியலில் ஊழல் நோய்போல் மாறியுள்ளது. ஆளுங்கட்சி ஊழல், எதிர்க்கட்சி ஊழல் என ஊழலைப் பிரித்து பார்க்கக் கூடாது. அதேபோல் வன்முறையையும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பிரித்துப் பார்க்க இயலாது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது பாரபட்சமில்லாத நிர்வாகத்திறன் மூலம், பயங்கரவாத வன்முறை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டார். தனது பதவி மற்றும் அதிகாரத்தை அவர் முக்கியமாகக் கருதாமல், கடமை, கண்ணியம் ஆகியவற்றை பிரதானமாகக் கொண்டு தனித்துவம் மிக்கவராக இருந்தார்.
எதிர்க்கட்சிகளை மதித்தார்: அதேபோல், எதிர்க்கட்சிகளுக்கான மரியாதையை கருணாநிதி அளித்து வந்தார். எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள், அவர்கள் வெளியிடும் வார்த்தைகளில் எப்போதும் அமிலம் இருக்கக் கூடாது. தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் நலன் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.