தமிழகம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கோடை கொண்டாட்டம் விற்பனை கண்காட்சி: அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கோடைக் கொண்டாட்டம் விற்பனைக் கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

இது தொடர்பாக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தக் கண்காட்சியில், தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்துமாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், பொம்மைகள், காபிப் பொடி, மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் திருநங்கையர் சுயஉதவிக் குழுக்களும், தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த சிறுதானிய உணவுகளும் இங்கு கிடைக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT