தமிழகம்

கோவையில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் இறப்பு: பிரேமலதா விஜயகாந்த்

ஆர்.கிருபாகரன்

கோவையில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலில் இறந்திருக்கின்றனர் என்று தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று டெங்கு நோயாளிகளைச் சந்திக்க வந்த பிரேமலதா விஜயகாந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஏற்கெனவே நேற்று (புதன்கிழமை) முறையாக அனுமதி பெற்றிருந்தும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் பிரேமலதா கோவை மருத்துவமனைக்கு வந்ததால், கோவை காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் அங்கு கூடியிருந்த தேமுதிக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு 4 பேருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் ஏராளமான தொண்டர்கள் உள்ளே சென்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார் பிரேமலதா.

அங்கிருந்தவர்களுக்கு பழங்களை வழங்கியவர், அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ''எல்லா நோயாளிகளையும் நேரில் சந்தித்துப் பேசினேன். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக நிர்வாகிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நம்மைச் சுற்றிலும் சுத்தம், சுகாதாரம் இல்லாததால்தான் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் ஒவ்வொரு வார்டுகளிலும் குப்பை, கூளங்களை அகற்றவும் சாக்கடைகளைச் சரிசெய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கவனிக்க வேண்டிய தமிழக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதிலும், பதவிகளைத் தக்க வைத்து, சுயலாபத்தைப் பார்க்கவுமே ஆர்வமாக உள்ளது.

தமிழகத்திலேயே சுத்தமான நகரமான கோவையிலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. டெங்குவால் திருவள்ளூர் மாவட்டமும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களின் போது போர்க்கால அடிப்படையில் செயல்படுவது போல தற்போதும் பணியாற்ற வேண்டும்.

லஞ்ச ஊழலின் வெளிப்பாட்டால்தான் ஆறுகளில் நுரை வெளியேறுகிறது. பொறுப்பான அதிமுக அமைச்சர் ஒருவர், அதை சோப்பு போட்டுக் குளித்ததால் ஏற்பட்ட நுரை என்கிறார். மற்றவர்களின் மீது குறை சொல்லியே அதிமுக அமைச்சர்கள் காலத்தைக் கழிக்கிறார்கள்.

கோவையில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலில் இறந்திருக்கின்றனர். தவறான புள்ளிவிவரங்களின் மூலம் அபாயத்தைக் குறைக்கப் பார்க்கிறார்கள். அதிகாரிகள் அனைவரும் மக்களுடன் சேர்ந்து டெங்கு காய்ச்சலுக்கு எதிராகப் போராட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதற்குப் பிறகு மருத்துவமனைக்கு வெளியில் இருந்தவர்களுக்கு தேமுதிக சார்பில் காய்ச்சிய நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT