சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
2023 - 2024-ம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித் துறையின் நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மாதம் சென்னையில் வெளியிட்டார். இதில், கோடைக்கால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதிகளை மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1300 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.