சென்னை: மதிமுக தலைமை பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தலையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பதவிக்கு வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார். முதன்மை செயலாளர் பதவிக்கு துரை வைகோ போட்டியிடுகிறார்.
மதிமுகவின் தலைமை பொறுப்புகளுக்கான 5-வது அமைப்புத் தேர்தல் ஜூன் 14-ம்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பொதுச்செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர், முதன்மை செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், தணிக்கைகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது.
தேர்தல் பொறுப்பாளர்களாக வழக்கறிஞர் பிரியகுமார், ஆ.வந்தியதேவன், ஆவடி அந்திரி தாஸ், தாயகம் ருத்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வைகோ, பூர்த்தி செய்த வேட்புமனுவை தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினார். அவைத்தலைவர் பதவிக்கு ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ், பொருளாளர் பதவிக்கு மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை வைகோவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு, மல்லை சி.ஏ.சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா சேக்முகமது ஆகியோரும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு 7 பேரும், தணிக்கை குழு உறுப்பினர்கள் பதவிக்கு 6 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனுவை திரும்பப் பெற ஜூன் 3-ம் தேதி கடைசி நாளாகும்.
கூடுதலாக வேட்புமனுவை யாரும் தாக்கல் செய்யாததால், இவர்களே போட்டியின்றி தேர்வுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூன் 14-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் புதியதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,
‘‘மதிமுகவில் எத்தனையோ புயல் வீசினாலும் இந்த இயக்கத்தை மனஉறுதியுடன் நடத்தி வருகிறோம். என்னுடைய மகன் துரைவைகோ கட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என தொண்டர்கள் ஆசைப்பட்டதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை.வரும் காலத்திலும் இதில் எந்தமாற்றமும் இருக்காது’’ என்றார்.