சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதை முழுவதும் பழக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரி, செல்போன் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஆக்கிரமிப்பு கடைகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி மையப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநில பயணிகள் என நாள்தோறும் 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், புதிய பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் நிரம்பியிருக்கும்.
புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சி சார்பில் தேநீர் கடைகள், ஓட்டல்கள், பெட்டிக் கடை, பழக்கடைகளுக்கு கட்டிடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், பேருந்து நிலையத்துக்குள் உள்ள 4 நடைமேடைகளிலும் கடைகள் அதிகளவில் உள்ளன. பயணிகள் செல்ல வசதியின்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஒருவரை ஒருவர் இடித்தபடி நடந்து செல்லும் நிலை உள்ளது.
அதிகாரிகள் அவ்வப்போது பெயரளவில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் ஓரிரு நாளில் மீண்டும் கடைகள் முளைத்து விடுகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆசியுடன் மீண்டும் கடை வைத்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, புதிய பேருந்து நிலையத்தின் நடைபாதைகளில் ஆங்காங்கே ஒரு சில கடைகள் இருந்த நிலையில் தற்போது கடைகள் நெருக்கியபடி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளையும் அகற்றிவிட்டு அங்கும் கடைகள் போடப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டல்களில் இருந்து வெளியேறும் மசாலா நெடியால் பயணிகள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சுழல் மாசடைகிறது.
எனவே, நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் கட்சிபேதமின்றி தயவுதாட்சன்யம் பார்க்காமல் அகற்றி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.