சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை பணி தொடங்க இருப்பதால், வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்பாதை திட்டப்பணிகளை விரைவில் தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், 4-வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை -வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேளச்சேரி – கடற்கரை இடையே இயக்கப்படும் பறக்கும் மின்சார ரயில்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டும் இயக்க முடிவு ெசய்யப்பட்டது.
இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகளை மேற்கொள்வது மற்றும் ரயில் சேவை வழங்குவது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை – எழும்பூர் 4-வது புதிய ரயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான, பணியை விரைவில் தொடங்க உள்ளோம். பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், வேளச்சேரி பறக்கும் ரயில்களை சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.