சென்னை: பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று திடீரெனத் தீ விபத்து நேரிட்டது. சென்னை எழும்பூரில் சிபிசிஐடி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம், மாநில காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிபிசிஐடி அலுவலக கட்டிடத்தில் கூடுதல் டிஜிபி, ஐ.ஜி., எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தனித் தனி அலுவலகங்கள், முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, தூத்துக்குடியில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த கட்டிடத்தில் ரயில்வே கூடுதல் டிஜிபி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த வளாகமே எப்போதும் பரபரப்பாகக் காணப்படும்.
இந்நிலையில், நேற்று மதியம் சிபிசிஐடி அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக அங்கு விரைந்தனர். புகையைத் தொடர்ந்து திடீரென கட்டிடம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த ஏசி கம்ப்ரஸர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கு வேறு ஏதும் காரணம் உண்டா என்ற கோணத்திலும் எழும்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.