சென்னை: சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலை - அவ்வை சண்முகம் சாலை (வி.பி.ராமன் சாலை) சந்திப்பில் தினமும் வாகன நெரிசல் மற்றும் அவ்வப்போது விபத்து நிகழ்கிறது. இவற்றிற்கு தீர்வு காண அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருவான்மியூரிலிருந்து அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக அண்ணாசாலை, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாநகர அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு ராயப்பேட்டை நெடுஞ்சாலை பிரதான வழியாக உள்ளது. இச்சாலையில் அவ்வை சண்முகம் சாலை (வி.பி.ராமன் சாலை), ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு என 4 முனை சந்திப்பு உள்ளது. மேலும், இதே சந்திப்பில் 5-வதாக மாசிலாமணி சாலையும் இணைந்து கொள்கிறது.
இந்த சாலை சந்திப்புகளை சுற்றி இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகம், அதிமுக கட்சி தலைமை அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகம், வர்த்தக நிறுவனங்கள், ராயப்பேட்டை காவல் நிலையம் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த பல வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள், குடியிருப்புகள் உள்ளன.இவற்றால், ராயப்பேட்டை நெடுஞ்சாலை அவ்வை சண்முகம் சாலை சந்திப்பில், காலை 7 முதல் 11 மணிவரையும் மாலை 5 முதல் 9 மணிவரையிலான ‘பீக் ஹவர்ஸ்’ மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போக்குவரத்து, 'சிக்னல்' இல்லை. மேலும், போக்குவரத்து போலீஸாரும் நிறுத்தப்படுவதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தங்களுக்குள் சமிக்ஞை காண்பித்தபடி விபத்து பயத்துடனே இந்த சாலை சந்திப்பை கடந்து செல்கின்றனர். சில இளைஞர்கள் எந்த வாகனத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாகனத்தில் விரைந்து செல்கின்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி கடக்கின்றனர்.
இது இப்படி என்றால், இச்சாலை சந்திப்பை கடக்கமுயலும் பாதசாரிகளை தாறுமாறாக செல்லும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் பயமுறுத்துகின்றன. இதனால், அவ்வப்போது, வாகன விபத்துகளும், இதனால் நிலை தடுமாறி விழும் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் காயம் அடைவதும் தொடர் கதையாக உள்ளது. எனவே, இதற்கு தற்காலிக தீர்வு காண உடனடியாக சிக்னல்அமைத்து போக்குவரத்து போலீஸாரை பணியமர்த்த வேண்டும். நிரந்தர தீர்வுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஹயாத் பாஷா கூறும்போது, ‘இந்த பகுதியில் சீறிபாயும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண சிக்னல் அமைத்தால் மட்டும் போதாது, மேம்பாலம் அமைத்து நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இப்பகுதியில் வாகன நெரிசல் உள்ளதாக புகார் வந்துள்ளது. இதற்கு தீர்வு காண ஏற்கெனவே சிக்னல் அமைத்தோம். ஆனால், அது எதிர்பார்த்த பலனளிக்கவில்லை. மாறாக வாகன நெரிசல் மேலும் அதிகரித்தது. இதனால், மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் நெரிசலுக்கு நிரந்த தீர்வு காணப்படும். இதேபோல், சென்னையில் வாகன நெரிசல் உள்ள சாலை சந்திப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.