ராமநாதபுரம்: ராமநாதபுரம் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும். தங்களின் வாழ்வாதாரம் உயரும் என்று பனைமரத் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2.50 கோடி பனைமரங்கள் உள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 லட்சம் பனைமரங்கள் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் சாகுபடி, மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக பனைத் தொழில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனைமரத் தொழில் மற்றும் அது சார்ந்த உப தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக சாயல்குடி, திருப்புல்லாணி, ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் பனைமரத் தொழில் நடைபெறுகிறது. இத்தொழில் ஜனவரி தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெறுகிறது.
பனை மரத்திலிருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி உள்ளிட்டவைக்கு சந்தையில் தேவை அதிக அளவில் உள்ளது. குறிப்பாக கருப்பட்டியை அன்றாட இனிப்பு பலகாரங்களில் மட்டுமின்றி, மிட்டாய்கள், சாக்லெட், சாஸ் உள்ளிட்ட மதிப்புக் கூட்டுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பட்டிக்கு தமிழகத்தில் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது. கடந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.20 கோடிக்கு கருப்பட்டி விற்பனை நடத்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
சாயல்குடி அருகே நரிப்பையூரைச் சேர்ந்த பனைமரத் தொழிலாளி மரியசிங்கம் கூறியதாவது: இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் பதநீர் வரத்து குறைவாக உள்ளது. அதனால் உற்பத்தியும் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது.
இந்த ஆண்டு சீஷன் தொடங்கியது முதல் தற்போது வரை 10 கிலோ கருப்பட்டி ரூ.1,700-க்கு கொள்முதல் செய்கின்றனர். இது எங்களுக்கு கட்டுப்படியான விலை இல்லை. 10 கிலோ ரூ.2,000-க்து விற்றால்தான் எங்களுக்கு லாபம் கிடைக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் காற்று அதிகமாக வீசும்போது பதநீர் உற்பத்தி மிகவும் குறைந்துவிடும்.
ராமநாதபுரம் மாவட்ட கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கினால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பாக அமையும். நாங்கள் கருப்பட்டி மொத்த வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கி தொழில் செய்கிறோம்.
இதற்கு மாற்றாக அரசு வங்கிக் கடன் வழங்கவும், கருப்பட்டி காய்ச்சும் உபகரணங்களை மானிய விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பட்டியை அரசே கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்தால் பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
மீனவர்களுக்கு மீன்பிடித் தடைகால நிவாரண நிதி வழங்குவதுபோல், பனைத்தொழிலாளர்களுக்கும் தொழில் இல்லாத 6 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.