அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக, தங்கள் தொகுதியில் பழனிசாமி போட்டியிட கோரி ஏராளமானோர் விருப்ப மனுகக்ளை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் வரவுள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்பமனு வழங்க ஏதுவாக, விருப்பமனு விநியோகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம், புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு ரூ.5 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது.
விருப்ப மனுவில் அதிமுகவில் எந்த ஆண்டிலிருந்து உறுப்பினராக உள்ளீர்கள், கட்சியில் தற்போது வகிக்கும் பதவி, சார்ந்த சமூகம், தமிழ் தவிர சரளமாக பேசத்தெரிந்த பிற மொழிகள், வெற்றி வாய்ப்பு விவரம், கட்சி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள், கட்சி போராட்டங்களில் சிறை சென்ற விவரம், நீதிமன்ற வழக்குகள் இருந்தால் அதன் விவரம் என்பன உள்ளிட்ட 25 கேள்விகள் இந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.
விருப்ப மனுக்களை பெறவும், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் நேற்று கடைசி நாள் என்பதால் கட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். ஏற்கெனவே, மனுக்களை பெற்றவர்கள், புதிதாக மனுக்களை வாங்கியவர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் தங்களுக்காகவும், தங்கள் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடவும் விருப்ப மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். மொத்தமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிமுக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.