தமிழகம்

100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்: மின்சாரத் துறை செயலர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 200 யூனிட் மின்​சா​ரம் வழங்​கும் புதிய அறி​விப்பு அமல்​படுத்​தப்​பட்​டாலும், ஏற்​கெனவே நடை​முறை​யில் உள்ள 100 யூனிட் இலவச மின்​சா​ரத் திட்​ட​மும் தொடரும் என்று மின்​சா​ரத் துறை தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக ஜோசப் விஜய் நேற்று பதவி​யேற்​றதும், விழா மேடை​யிலேயே முதல் கையெழுத்​தாக 200 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கும் உத்​தர​வில் கையெழுத்​திட்​டார். அதே​நேரம் தமிழகத்​தில் ஏற்​கெனவே நடை​முறை​யில் உள்ள அனைத்து வீடு​களுக்​கும் 100 யூனிட் இலவச மின்​சா​ரம் திட்​டம் தொடருமா என்​பது போன்ற பல்​வேறு கேள்வி​கள் சமூக ஊடகங்​களில் முன்​வைக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில் மின்​சா​ரத் துறை சார்​பில் வெளி​யிடப்​பட்ட அரசாணை​யில் 100 யூனிட் இலவச மின்​சா​ரம் திட்​டம் தொடரும் என்று கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மின்​சா​ரத் துறை செயலர் மங்​கத் ராம் சர்மா வெளி​யிட்ட அரசாணை: தகு​தி​யுள்ள அனைத்து வீட்டு மின்​நுகர்​வோர்​களுக்​கும் 200 யூனிட்​கள் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும் என்று முதல்​வர் ஜோசப் விஜய் அறி​வித்​துள்​ளார்.

அதன்​படி இரு மாதங்​களுக்கு 500 யூனிட் வரை பயன்​படுத்​தும் வீடு​களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்​சா​ரம் வழங்​க​வும், இதற்​காக ஆண்​டு​தோறும் ஏற்​படும் கூடு​தல் மின்​கட்டண மானிய​மான ரூ.1,730 கோடியை தமிழக அரசு ஏற்​க​வும் ஆணை​யிடப்​படு​கிறது.

2.2 கோடி பேர் பலன்: இத்​திட்​ட​மானது விலை​வாசி உயர்​வு, பணவீக்​கத்​தின் தாக்​கத்தை சமாளிக்​க​வும், சாமானிய மக்​களின் சுமை​யைக் குறைப்​ப​தற்​கும் உதவும். அதே​போல், 500 யூனிட்​டுக்கு மேல் மின்​சார பயன்​பாடு கொண்ட வீடு​களுக்கு ஏற்​கெனவே உள்ள 100 யூனிட் இலவச மின்​சா​ரம் நடை​முறை தொடரும். இந்​தத் திட்​டம் நேற்று முதலே அமலுக்கு வந்​தது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே தமிழகத்​தில் தற்​போது 2.55 கோடி வீட்டு மின் நுகர்​வோர்​கள் இருக்​கின்​றனர். இந்த அறி​விப்​பால் சுமார் 2.2 கோடி பேர் பயனடை​வர்​ என தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

SCROLL FOR NEXT