சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் 100 சதவீதம் முன்கூட்டியே வார்க்கப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் உள்ளகரம் - சோழிங்கநல்லூர் வரை அமையவுள்ள உயர்மட்ட வழித்தடப் பகுதியில், முன்கூட்டியே வார்க்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானப் பணியில் இறுதி ‘யு-கர்டர்’ வார்க்கும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இதன்மூலம் அனைத்து முன்கூட்டியே வார்க்கப்பட்ட கூறுகளும் 100% நிறைவு செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 3,126 முன்கூட்டியே வார்க்கப்பட்ட கூறுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஐ-கர்டர்கள் 1,041, யு கர்டர்கள் 892 ஆகியவை அடங்கும். வார்க்கப்பட்ட 892 யு-கர்டர்கள் மூலம், 2-ம் கட்டத் திட்டப் பணிகளிலேயே அதிக அளவில் யு-கர்டர்கள் தயாரித்த சாதனை இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உள்கட்டமைப்பு பணிகளுக்காக 98,052 கன மீட்டர் கான்கிரீட், 18,550 மெட்ரிக் டன் கம்பிகள், 3,010 மெட்ரிக் டன் அதிவலிமை எஃகு கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இறுதி யு-கர்டர் வார்ப்புப் பணி நிறைவு விழாவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் ஆர். சீனிவாசன் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்தகட்டப் பணிகள்
இறுதி யு-கர்டர் வார்ப்புப் பணி வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, மீதமுள்ள யு-கர்டர்களைப் பொருத்தும் பணி மற்றும் மெட்ரோ நிலையங்களின் நுழைவு/வெளியேறும் அமைப்புகளின் கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும் வகையில், பணிகள் விரைவாக முன்னேறி வருகின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.