உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன்

 
தமிழகம்

ரூ.81 கோடியில் 100 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.

விவாதத்துக்குப் பிறகு, அமைச்சர் ப.வெங்கடரமணன் 24 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: உணவு தானியங்களை சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு 13 மாவட்டங்களில் மொத்தம் 31 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ.81.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். அரியலூர், நாமக்கல், மேட்டுப்பாளையம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தலா 3,400 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன சேமிப்பு கிடங்குகள் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

தலா 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர கட்டமைப்புடன் சேமிப்பு கிடங்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஈரப்பத அளவுமானி, கன்வேயர் பெல்ட் மற்றும் இதரவசதிகளுடன் கூடிய 100 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் ரூ.81 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைமூலம் கட்டப்படும்.

1500-க்கும் அதிகமான குடும்பஅட்டைகள் கொண்ட நியாயவிலைக் கடைகளில், பொதுமக்கள் நலன் கருதி, முதற்கட்டமாக 150 எண்ணிக்கையில் புதிய நியாயவிலைக் கடைகள் பிரித்து அமைக்கப்படும். புகார் மீது உடனுக்குடன் தீர்வுகாண்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு 81 மடிக்கணினிகள் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 24 அறிவிப்புகளை வெளியிட்டார்.

SCROLL FOR NEXT