சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் ம.விஜய் பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது: பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படியில் தலா 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்துக்கான அரசின் பங்களிப்பு தொகை 8 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும், நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான நலநிதி பங்குத் தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும் உயர்த்தப்படும்.
ஆயிரம் தனிநபர் தறிக்கூடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் அமைப்பதற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். கைத்தறித் துறையில் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கில், இளம் தொழில்முனைவோரின் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும்.
சர்வதேச சந்தையைக் கவரும் வகையில் காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ‘பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம்’ மற்றும் திருபுவனத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய வடிவமைப்பு நிலையம் அமைக்கப்படும்.
பின்னலாடைத் துறையை மேம்படுத்த ‘தமிழ்நாடு பின்னலாடை வாரியம்' அமைக்கப்படும். கூட்டுறவு நூற்பாலைகளை நவீனப்படுத்த ரூ.12 கோடி மற்றும் கன்னியாகுமரி நூற்பாலையில் 4 புதிய காற்றாலைகள் அமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை நவீனப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.25 லட்சத்தில் ‘ஜவ்வாது மலைத்தேன் பதப்படுத்தும் அலகு' மற்றும் பனைப்பொருட்களை சந்தைப்படுத்த தூத்துக்குடி, கிருஷ்ணகிரியில் தலா 5 புதிய விற்பனை அங்காடிகள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 26 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
கூலி உயர்வு எவ்வளவு?
முன்னதாக, மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி பேசும்போது, ‘‘இலவச வேட்டி-சேலை திட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு சேலைக்கான கூலி ரூ.178.36-லிருந்து ரூ.203.86 ஆகவும் வேட்டிக்கு ரூ.151.76-லிருந்து ரூ.166.26 ஆகவும் உயர்த்தப்படும். தீபாவளிக்கு கோ-ஆப் டெக்ஸில் லினன் துணியில் வேட்டி-சேலைகள் அறிமுகப் படுத்தப்படும்’’ என்றார்.