நயினார் நாகேந்திரன்
சென்னை: ‘தமிழகத்தில் ஒரே நாளில் 10 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேடைகளில் வாய்ச்சவடால் பேசும் முதல்வர் ஜோசப் விஜய், தன் கண்முன்னே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டும் மவுனம் காப்பது ஏன்?' என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பெண்மை போற்றப்படும் தமிழகத்தில், ஒரே நாளில் (23/06/2026) பத்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் சென்னை மெரினா வரை பள்ளிச் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள் என எவருக்கும் ஜோசப் விஜய் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதை இக்கொடூரங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
மேடைகளில் வாய்ச்சவடால் பேசும் முதல்வர் ஜோசப் விஜய், தன் கண்முன்னே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டும் மவுனம் காப்பது ஏன்?. கிருஷ்ணகிரியில் ஒரு பெண் மானத்தைக் காக்கத் தற்கொலைக்கு முயலும் அவலமும், மெரினாவில் "வேலை முக்கியம்தான், ஆனால் மானத்தை அடகு வைக்க முடியாது" என்று கதறும் ஒரு ஏழைத் தாயின் அபயக்குரலும் முதல்வரின் காதுகளில் விழவில்லையா?. குற்றவாளிகள் காவல்துறையின் மீது பயமின்றித் திரிவது இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.
எனவே பெண்களின் பாதுகாப்பைக் கேலிக்கூத்தாக்கிய தவெக அரசுக்கு என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்றும், இனியாவது முதல்வர் விஜய் தனது மௌனத்தைக் கலைத்து காவல்துறையைத் தட்டி எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.