தமிழகம்

ரூ.332 கோடியில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 10 நெல் சேமிப்பு வளாகங்கள்

முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 7 மாவட்டங்களில் ரூ.332.46 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுவதற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டத்துக்கு தானியங்களின் சேமிப்பு கொள்ளளவை அதிகப்படுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ரூ.4.97 கோடியில் 2,000 டன் கொள்ளளவு, நீலகிரி மாவட்டம், பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் தலா ரூ.4.50 கோடியில் 2,500 டன் கொள்ளளவுடன், வட்ட செயல் முறை கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.13.97 கோடியில் 7,000

டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 3 வட்ட செயல் முறை கிடங்கு வளாகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகி கொள்முதல் செய்யப்படும் “ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது” என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூர் கிராமத்தில் ரூ.170.22 கோடியில் ஒரு லட்சம் டன் கொள்ளளவிலும், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்தில் ரூ.29.02 கோடியில் 20,500 டன் கொள்ளளவிலும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் ரூ.22.95 கோடியில் 17,000 டன் கொள்ளளவிலும், மயிலாடுதுறை மாவட்டம், பரசலூர் கிராமத்தில் ரூ.12 கோடியில் 9,000 டன் கொள்ளளவிலும், தரங்கம்பாடி வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் ரூ.27 கோடியில் 21,000 டன் கொள்ளளவிலும் நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டப்பட உள்ளன.

அதே போல், கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், டி.புடையூர் கிராமத்தில் ரூ.12.66 கோடியில் 9,500 டன் கொள்ளளவிலும் மற்றும் திட்டக்குடி வட்டம், தாழநல்லூர் கிராமத்தில் ரூ.15 கோடியில் 11,000 டன் கொள்ளளவிலும், திருவண்ணாமலை மாவட்டம், மேல்பெண்ணாத்தூர் வட்டம், செங்கம் கிராமத்தில் ரூ.17.91 கோடியில் 12,000 டன் கொள்ளளவிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கோவிலம்மாபட்டி கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூப்பள்ளி கிராமத்தில் தலா ரூ.12.85 கோடியில் 9,000 டன் கொள்ளளவிலும் என மொத்தம் 2.18 லட்சம் டன், ரூ.332.46 கோடியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கோவி.செழியன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உணவுத் துறை செயலர் சத்யபிரத சாஹூ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT