வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்த பயணிகள்.
சென்னை: தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. சென்னையைப் பொருத்தவரை, வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான மாணவர்களும் இங்கு தங்கி உயர்கல்வி பயின்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஏராளமானோர் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் நீண்ட காலமாக வசித்துவரும் குடும்பஸ்தர்கள் பலரும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, தங்கள் வாக்குகளை சென்னைக்கு மாற்றிக் கொண்டுள்ளனர். திருமணம் ஆகாதவர்கள், விடுதிகளில் தனியாக தங்கியுள்ளவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்களது வாக்குகளை சொந்த ஊரிலேயே வைத்துள்ளனர். தீபாவளி, பொங்கலுக்குச் செல்வதுபோல, தேர்தலின்போதும் இவர்கள் சொந்த ஊருக்குச் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இவர்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கடந்த 21-ம் தேதி முதல் இன்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை எழும்பூரில் ரயிலில் ஏறுவதற்காக திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்.
அதேபோல, தெற்கு ரயில்வே சார்பில் மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் விதமாக இந்த ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகள், ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த 21-ம் தேதி போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்ட 3,431 பேருந்துகளில் 1.90 லட்சம் பேர், ரயில்களில் 1.50 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்களில் ஒரு லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.
நேற்று 5,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு அதில் 3 லட்சம் பேரும், ரயில்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். மொத்தமாக கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள், தனியார் வாகனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதேபோல, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்ளி்ட்ட நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, இவர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்: இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆம்னி பேருந்துகளை முன்பதிவு செய்யும் இணையதளங்கள், செயலிகளில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தைவிட ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். போக்குவரத்து துறை மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பலரும் புகார் தெரிவித்த நிலையில், பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், ‘சங்கம் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தைவிட கூடுதலாக சிலர் ஆன்லைனில் டிக்கெட் கட்டணங்களை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து, தமிழக அரசுத் துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கட்டணங்கள் உடனடியாக குறைக்கப்பட்டன.
சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி வழங்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது அரசு சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.