திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் மாநகரப் பேருந்து நிலையம், அப்பகுதியின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது.
இங்கிருந்து சென்னை, கேளம்பாக்கம், சிறுசேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வதால், இந்த பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமாக உள்ளது.
பயணிகளின் வசதிக்காக பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாநகரப் பேருந்து நிலையத்தில், சமீபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பணிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டுக்கு மேற்பட்ட பணிகள் மின்-டெண்டர் (e-Tender) முறையில் ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னரே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், திருப்போரூர் மாநகரப் பேருந்து நிலைய சீரமைப்புப் பணியில் டெண்டர் நடைமுறையே பின்பற்றப்படவில்லை என்றும், பேரூராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக பணியை மேற்கொண்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், அரசு வழிகாட்டுதலின்படி நடைபெறும் ஒவ்வொரு பணியிடத்திலும் திட்ட விவரங்கள் அடங்கிய தகவல் பலகை கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.
அந்த பலகையில், பணி பெயர், திட்ட மதிப்பீடு, எந்த நிதியின் கீழ் பணி நடைபெறுகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒப்பந்ததாரரின் பெயர், பணியின் தொடக்க மற்றும் நிறைவு தேதி, பணியை மேற்பார்வை செய்யும் பொறியாளரின் பெயர் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.
ஆனால், இந்த சீரமைப்புப் பணியில் இதுபோன்ற தகவல் பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்றும், பணி எந்த நிதியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “தகவல் பலகை வைக்காததே முதல் விதிமீறல்” என சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதுமட்டுமின்றி, பேரூராட்சியில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளிலும் இதேபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், டெண்டர் நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, திருப்போரூர் பேரூராட்சியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளையும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த சீரமைப்புப் பணிக்கான நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப ஒப்புதல், டெண்டர் ஆவணங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் செலவின விவரங்களை விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
அரசு நிதியில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படுவதால், அவை அனைத்தும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, முழு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, திருப்போரூர் மாநகரப் பேருந்து நிலைய சீரமைப்புப் பணியில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.