சென்னை: பணியின்போது உயிரிழக்கும் போலீஸார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு, கருணைத் தொகை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது.
முன்னதாக இத்துறைகள் குறித்து 59 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் விஜய் பேசியதாவது: போதைப் பொருள் பயன்பாட்டை திறம்பட ஒழிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில், தலா ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
பாதுகாப்பு, புலனாய்வு, விசாரணை உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்குவது உட்பட காவல்துறையை நவீனப்படுத்த ரூ.212 கோடி ஒதுக்கப்படும்.
காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்கான மாதாந்திர நிதி ரூ.3,750-ல் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும், ரூ.8,250-ல் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். சிறப்புப் பிரிவுகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.
பணியின்போது சட்டம்- ஒழுங்கை காக்கும் நடவடிக்கையில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையும் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.
காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்த ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள் வாங்கப்படும். ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. காவலர் குடியிருப்புகளில் கழிவுநீர் மற்றும் வடிகால் அமைப்புகள் ரூ.36 கோடியில் புதுப்பிக்கப்படும்.
வண்டலூர் அருகே உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் ரூ.23 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும். சேலம், விழுப்புரம் தடய அறிவியல் ஆய்வகங்களில் ரூ.14 கோடியில் மரபணு ஆய்வுப் பிரிவுகள் அமைக்கப்படும்.
தீயணைப்புத் துறை
தமிழகத்தில் 6 இடங்களில் தீயணைப்பு, மீட்புப் பணி நிலையங்கள் ரூ.12.84 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். 15 இடங்களில் ரூ.65.90 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். தீயணைப்பு துறைக்கு ரூ.60 கோடியில் 50 நீர்தாங்கி வண்டிகள், ரூ.17.50 கோடியில் 50 துரித மீட்பு ஊர்திகள், ரூ.60 கோடியில் 2 வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள், ரூ.8 கோடியில் 10 கனரக மீட்பு வாகனங்கள் வழங்கப்படும். மேலும், கண்காணிப்பு மற்றும் பளுதூக்கும் பணிகளுக்காக 35 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.
பெண் வீரர்கள் நியமனம்
தீயணைப்புத் துறையில் ‘தீயணைப்போர்’ என்ற பதவி ‘தீயணைப்பு வீரர்’ என மாற்றப்படும். புதிதாக பெண் தீயணைப்பு வீரர்கள் நியமிக்கப்படுவர்.
பணியாளர்களுக்கு காவல்துறையினருக்கு இணையான சீருடைப்படி வழங்கப்படும். பொங்கலன்று வழங்கப்படும் முதல்வர் தீயணைப்பு பணிகள் பதக்கம் எண்ணிக்கையும், படித்தொகையும் உயர்த்தப்படும். ரூ.3.20 கோடியில் 10 ஆய்வுக்குழுக்கள் கொண்ட புதிய ஆய்வுப் பிரிவு அமைக்கப்படும் என்பது உட்பட 59 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.