வாழ்வு இனிது

உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த கபடி! | ‘டைகர்’ ராஜரத்தினம் 3

டி.என் ரகு

வாழை, தென்னை, மா மரங்கள் சூழ்ந்த கணபதிபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் அழகிய கிராமம். மறுபக்கம் இயற்கையின் இன்னொரு கொடையாக லெமூர் கடற்கரை. மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபுரத்திற்கு, ‘மான்பட்டவிளை’ என்கிற பெயரும் உண்டு.

தான் பிறந்து வளர்ந்த கணபதிபுரத்துக்கு, கபடியின் மூலம் பெருமை சேர்த்தார் ராஜரத்தினம். கணபதிபுரத்தை இரண்டாகப் பிளந்து செல்லும் நெடுஞ்சாலைக்கு அருகே இளநீர் விற்றுக்கொண்டிருந்த ஸ்ரீலலிதா ஆணியைத் தலையில் அடித்தது போலச் சொன்னார்: “ராஜரத்தினம் அண்ணாச்சி எங்க ஊரோட அட்ரஸ்; எங்க அடையாளம்.” கணபதிபுரத்துக்கு மட்டுமா?

சுப்பையா, பொன்னம்மாள் தம்பதிக்கு நான்காவது குழந்தையாக ராஜரத்தினம் 1959ஆம் வருடம் மே ஆறாம் தேதி பிறந்தார். இவருக்கு இரண்டு அண்ணன்கள், ஓர் அக்கா, இரண்டு தங்கைகள் உள்ளனர். ராஜரத்தினம் விளையாட்டோடு வளர்ந்தவர். பெரிய அண்ணன் ராஜாமணி சிறந்த கபடி வீரர். “ரொம்ப நல்லா விளையாடுவார்; பெரிய போட்டிகளில் வித்தியாசமான ஆட்டத்தைக் கொடுப்பார்” என்கிறார் ராஜரத்தினம்.

அண்ணன் ராஜாமணியிடமிருந்து கபடி மட்டுமல்லாமல், பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான சிலம்பம் மற்றும் அடிமுறையையும் கற்றுக்கொண்டார் ராஜரத்தினம். எந்த ஆயுதமும் இல்லாமல் எதிரியை வீழ்த்தும் அடிமுறை கன்னியாகுமரி மாவட்டத்தின் தனிச்சிறப்பு

நரம்பைக் குறிவைக்கும் வர்மக்கலை, முட்டிகளை லாகவமாக லாக் செய்வது அடிமுறையின் முக்கிய அம்சங்கள். ராஜரத்தினத்தின் சீரிய கபடிப் பயணித்துக்கு வர்மம் பயனுள்ள வழித்துணையாக இருந்திருக்கிறது. “வர்மக் கலையைச் சரியாகப் பயன்படுத்தி புடிச்சா ரைடரை ஈசியா மடக்க முடியும். சின்ன வயதில் அடிமுறையைக் கத்துக்கிட்டது பின்னாலே கபடியிலே எனக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்தது” என்கிறார் ராஜரத்தினம்.

ராஜரத்தினத்தின் இரண்டாவது அண்ணன் ராஜகோபாலும் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்தான். ராணுவத்தில் பணியாற்றியவர். உள்ளூர்த் தற்காப்புக்கலை மட்டுமல்லாமல் வெளிநாட்டு கராத்தேயையும் தன் தாய்மாமா மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ராஜரத்தினத்துக்குக் கிடைத்தது.

அமெரிக்காவில் சிறு வயதில் பல்வேறு விளையாட்டுகளில் பங்குகொள்ளும் சூழல் பின்னர் ஒரு விளையாட்டில் சிறக்க உதவும் என்பார்கள். அடிமுறை, சிலம்பம், கராத்தே ராஜரத்தினத்தின் கபடிக்கு அடி உரமாகின.

அண்ணன்மார்களின் விளையாட்டு ஆர்வம் மட்டுமல்ல, அம்மா பொன்னம்மாளின் அமோகமான ஆதரவும் ராஜரத்தினத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளது. உடற்பயிற்சியும் கட்டுப்பாடும் வாழ்க்கைக்கு முக்கியம் என்று, ராஜரத்தினத்தைச் சிறு வயதிலிருந்தே ஊக்கப்படுத்தி வந்துள்ளார். ராஜாமணியும் ராஜகோபாலும் காலையில் பயிற்சிக்குச் சென்றால், ராஜரத்தினமும் செல்ல வேண்டும் என்பது அந்தத் தாயின் கட்டளை.

“எனக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை என்பதை முதலில் அறிந்தவர் என் தாய்தான்” என்று சிரிக்கிறார் ராஜரத்தினம். “நான் தோல்வியில் துவளாமல் தட்டிக் கொடுத்தவர். அடிபட்டால் ஒண்ணும் இல்லை விளையாடு என்று எப்போதும் ஊக்கப்படுத்தியவர்.”

பொன்னாமாளுக்கு நகைச்சுவை உணர்வும் உண்டு. 1990 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ராஜரத்தினம் சிறப்பாக விளையாடியதற்கு எது முக்கியமான காரணம் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘அவன் எட்டு வயது வரை தாய்ப்பால் குடிச்சான்’ என்று சொன்னார் பொன்னம்மாள்.

கபடி, கணபதிபுரத்தோடு பின்னிப் பிணைந்தது என்கிறார் ராஜரத்தினம். “ஊரே விளையாடும். மீன் குஞ்சுக்கு நீந்தக் கத்துக் கொடுக்க வேண்டாம் என்பது மாதிரி, கணபதிபுரத்துக்குக் கபடி சொல்லிக் கொடுக்க வேண்டாம். எங்க ஊருல ஒரு நல்ல அணி இருந்தது. பக்கத்து ஊரைச் சேர்ந்த அற்புதமான வீரரான மனோகரன், கணபதிபுரத்தில் அடிக்கடி விளையாடுவார்; அவரது ஆட்டத்தை நான் ரொம்ப ரசிப்பேன். ஒரு சிலருக்குக் கபடி மூலம் அரசு வேலையும் கிடைத்தது.”

ஊரில் உள்ள நலம் விரும்பிகள், உறவினர்கள் கபடியினால் ஏற்படும் காயங்களைச் சுட்டிக்காட்டி விளையாடிதான் ஆக வேண்டுமா என்று கேட்டால், சட்டென்று சொல்வாராம் ராஜரத்தினம், “கபடி எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்; இந்த உலகத்தையே என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.” கபடி வாக்குத் தவறவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசியலில் மார்ஷல் நேசமணி, இசையில் கே.வி.மகாதேவன், நகைச்சுவையில் என். எஸ். கிருஷ்ணன் போல, கபடியில் ராஜரத்தினம்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.

தொடர்புக்கு: tnrags@gmail.com

SCROLL FOR NEXT