கபடி எல்லாருக்கும் ஒரு விளையாட்டு; தமிழர்களுக்கு உணர்வு. சடுகுடு என்கிற பெயரிலும் நாம் அழைக்கும் கபடி, கும்மிடிப்பூண்டியிலிருந்து குளச்சல் வரை நீக்கமற பரவியிருக்கும் தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளம்! எல்லா விளையாட்டுகளும் எல்லா ஊர்களிலும் கொண்டாடப்படாது. ஆனால், கபடிக்குத் தமிழ்நாட்டில் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
தமிழர் திருநாளாம் பொங்கலில் கபடிக்குத் தனி இடம் உண்டு. கபடி எங்கு தோன்றியது, எப்படித் தோன்றியது என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது என்றாலும், தமிழ்நாட்டை அதன் கலாச்சாரத் தலைநகரம் என்று சொல்லலாம். இதைப் படிக்கும் உங்களில் யாராவது கோட்டைக் கிழித்து ஆட்டத்தை ஆடாதவர் உண்டா?
1951, 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி ஒரு கண்காட்சி விளையாட்டாக இருந்திருந்தாலும், அதற்கு 1985 தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் மூலம்தான் பெரிய சர்வதேச மேடை கிடைத்தது. டாக்காவில் நடந்த அந்தப் போட்டியில் ராஜரத்தினம் விளையாடிருக்க வேண்டும்; நாம் இந்திய அணியில் இருப்போம் என்று நினைத்தவருக்குக் கடைசியில் கிடைத்தது ஏமாற்றமே.
“விளையாடுவது என் வேலை; செலக்ஷன் என் கையில் இல்லை. என் கண்ட்ரோலில் இல்லாத ஒன்றைப் பற்றி நான் கவலைப்பட்டுப் பயனில்லை” என்கிறார் ராஜரத்தினம்.
இரண்டு ஆண்டுகளில் ராஜரத்தினத்துக்கு இந்தியா ஜெர்சியை அணியும் வாய்ப்பு கிடைத்தது. 1987இல் கல்கத்தாவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு ராஜரத்தினம் தேர்வானார்; தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்னோர் அற்புதமான வீரரான ‘மணல்மேடு’ சுப்ரமணியனுக்கும் அந்த அணியில் இடம் கிடைத்தது.
1990களில் இந்திய கபடி அணி
வங்கதேசம், பாகிஸ்தானை எளிதாகத் தோற்கடித்து, இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. ராஜரத்தினத்தின் சர்வதேசப் பயணத்தில் அந்தத் தங்கப் பதக்கம் ஒரு தொடக்கமே. 1990இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போது அவர் வென்ற தங்கம் அடுத்த பாய்ச்சல் என்றால், இந்திய அணியின் தலைவராக 1994 ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்தது முத்தாய்ப்பு!
1990 ஆசிய விளையாட்டுப் போட்டி கபடிக்கு மட்டுமல்ல, ராஜரத்தினத்தின் வாழ்க்கைக்கும் ஒரு திருப்புமுனைதான். “தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த எனக்கு பெய்ஜிங்கில் கிடைத்த தங்கம் இந்திய அளவில் ஒரு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. என்னைக் கபடி கோபுரத்தின் மேலே உட்கார வைத்தது. அந்த அணியில் நான் மட்டுமே தமிழன் என்பதால், அந்த வெற்றி தமிழ்நாட்டுக்குக் கிடைத்த அங்கீகாரம். கபடியையும் தமிழ்நாட்டையும் பிரிக்கவே முடியாது. நம்ம மாநிலத்தில் எப்போதும் ஏதோ ஒரு இடத்தில் கபடி விளையாடிக்கிட்டே இருப்பாங்க” என்கிறார் ராஜரத்தினம்.
ராஜரத்தினத்துக்கு இந்திய அணியில் இடம் எளிதாகக் கிடைக்கவில்லை. “பல ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. 1987 SAF Games தேர்வுகூடக் கடைசியில்தான் முடிவானது. ஆனால் எப்போதுமே நான் நம்பிக்கையை இழக்கவில்லை; என் நேரம் வரும் என்று காத்திருந்தேன். இந்தியா போன்ற பெரிய நாட்டில் பன்னிரண்டு வீரர் அணியில் இடம்பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை. வாய்ப்பு கிடைத்துவிட்டால் விட்டுவிடக் கூடாது. என்னோட தனித்துவமான ஆட்டம்தான் என்னை இந்திய அணியில் நிலைப் பெற வைத்தது” என்கிறார் ‘டைகர்’ ராஜரத்தினம்.
ராஜரத்தினத்திற்குப் பிறகு 5 தமிழ்நாட்டு வீரர்கள் ‘மணத்தி’ கணேசன், பாஸ்கரன் (1994), முருகானந்தம் (1998), ஜீவகுமார் (2010), ராஜகுரு (2014) மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஜெர்சியை அணிந்துள்ளனர்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டி அணித் தேர்வுக்கு முந்தைய முகாமில் திருச்சியைச் சேர்ந்த தீபக் சங்கர் இருந்தார். இறுதி அணியில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் இல்லை. ராஜரத்தினம் தலைமை வகித்த 1994 அணியில் மூவர் தமிழ் நாட்டிலிருந்தும், ஒருவர் கர்நாடகத்திலிருந்தும் பங்கேற்றனர்.
2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கம் வென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த தடுப்பாட்டக்காரர் ஜீவகுமார், ராஜரத்தினம்தான் முன்னத்தி ஏர் என்கிறார். “அவர் வாங்கிய தங்கம்தான் தமிழக வீரர்களை, காலரைத் தூக்கிவிட்டு நடக்கச் செய்தது. அது அவருக்குக் கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல; தமிழகத்திற்கே கிடைத்த அங்கீகாரம்” என்று பெருமை பொங்கச் சொல்கிறார்.
தமிழ்நாடு கபடி வீரர்கள், ஜீவகுமார், ராஜகுரு
தமிழ்நாட்டிலிருந்து கடைசியாக ஆசிய விளையாட்டு சாம்பியனான ராஜகுருவைப் பொறுத்தவரை, ராஜரத்தினம் தமிழகக் கபடியின் அடையாளம். “இரண்டு ஏசியன் கேம்ஸ்லயும் அண்ணன் மெயின் பிளேயர். இரண்டுலயும் அவரோட முத்திரையைப் பதித்தவர்” என்கிறார் ராஜகுரு.
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.