லொஸானில் ஏரிகள் எங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்பதுபோல் எங்கெங்கு காணினும் ஏரிகள்.
அந்த ஏரிகளைப் பார்வையாளர்கள் நன்கு ரசிக்கும் வகையில் ஷோகேஸ் செய்திருப்பதுதான் இங்கு முக்கியமான செய்தி. ஏரிக்கரை ஓரமாக நடந்து செல்ல அகலமான நடைபாதைகள் உள்ளன. அதில் நடப்பது ரம்மியமான அனுபவம். இந்த ஏரிகளின் மறுபுறத்தில் மலையாக இருப்பதால் ஏரிகளைக் காண்பது மேலும் அற்புதமான அனுபவமாக இருக்கிறது.
குறிப்பாக ’ஊஷி’ என்கிற ஏரி மிக அற்புதமாகக் காட்சியளித்தது. அதிலுள்ள மிக சுத்தமான நீரின் நீல நிறம் மனதை மயக்கும். அதை ஒட்டியுள்ள கரையில் நடந்து சென்றால் ஒலிம்பிக் மியூசியத்தைப் பார்க்க முடியும். உணவை வீட்டிலிருந்து கொண்டுவந்து (உணவகங்களில் விலை மிக அதிகம்) இங்கே சாப்பிடும் பலரைக் காண முடிந்தது. சாப்பிட்ட பின் எதையும் சிதறவிடாமல் குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள். ஊஷி ஏரிக்கரை ரோலர்ஸ்கேட்டிங் செய்வதற்கு ஏற்றது.
இதற்கு அருகே உள்ள மெட்ரோ ஸ்டேஷனின் ஊஷி என்கிற பெயர், 2015இல் ஊஷி ஒலிம்பிக் என்று மாற்றப்பட்டது. காரணம் அப்போது லொஸானிலுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு தனது நூற்றாண்டைக் கொண்டாடியதுதான்.
ஏரியின் மீது முள்கரண்டி
லொஸான் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் காணப்பட்ட ஏரி சிறியதுதான். ஆனால், அது போகும் பாதை அழகானது. சவுக்கு மரங்கள் நடுவில் நமக்கான பாதை என்று அழகாக இருக்கிறது. வெவே பகுதி ஏரியில் உள்ள நீரின் மீது ஓர் உயரமான முள்கரண்டி காணப்படுவது வியப்பாக இருந்தது. 26 அடி உயரம் கொண்டது இந்த முள்கரண்டி! இதைக் காணும் பலருக்கும் எதற்காக ஏரியின் மீது ஒரு முள்கரண்டி என்று தோன்றலாம்.
வெவே பகுதியில் அலிமென்டேரியம் என்கிற அருங்காட்சியகம் ஒன்று உண்டு. இது ஓர் உணவு அருங்காட்சியகம். இதை உணர்த்தும் வகையில்தான் அந்த முள் கரண்டி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த அருங்காட்சியகத்தின் பத்தாவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த முள்கரண்டியை 1995இல் உருவாக்கினர். அதற்கு அடுத்த ஆண்டிலேயே அது, ஏரியின் அழகைக் குலைக்கிறது என்று, அங்கிருந்து நீக்கப்பட்டது. பின்னர் லூசர்ன் நகரில் உள்ள ஒரு தோட்டத்துக்கு மாற்றப்பட்டது.
ஆனால், பொதுமக்கள் முள்கரண்டி அந்த ஏரியின் மீது இருந்தாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த, மீண்டும் 2014இல் அது அந்த ஏரியின் மீது வைக்கப்பட்டது. இதுதான் உலகின் மிகப் பெரிய முள்கரண்டி என்கிறது கின்னஸ்.
கறுப்புப் பண கோடீஸ்வரர்களின் சொர்க்கம் என்று மட்டுமே இங்கு பலமுறை தலைப்புச் செய்தியாகிறது சுவிட்சர்லாந்து. ஆனால், இரண்டு உலகப் போர்களிலும் கலந்துகொள்ளாத அமைதி விரும்பி என்கிற பிம்பமும், ’செர்ன்’ எனப்படும் ஐரோப்பாவின் தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சிக் கூடமும் சுவிட்சர்லாந்தின் தனிப் பெருமைகள். ஏரிகள், பனிமலைகள் என்று இயற்கையால் அருளப்பட்ட நாடு சுவிட்சர்லாந்து. அவற்றை எப்படிப் பராமரிக்கிறார்கள் என்பதுதான் அதிலுள்ள சிறப்பு. சுவிட்சர்லாந்தில் மிகப் பெரும்பாலான இடங்களில் மாசில்லாத சூழலில் இருப்பதால் சுவிட்சர்லாந்து சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது!
பயணம் நிறைவுற்றது.