அது 1942ஆம் ஆண்டு. வாடிகனில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயம். இப்போதைய பெயர் செயின்ட் பீட்டர் தேவாலயம். மொன்சிக்னோர் லூட்விக் காஸ் என்கிற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தலைமையில் ஆராய்ச்சிக் குழுவினர் அந்தத் தேவாலயத்தின் அடித்தளத்துக்குக் கீழே அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு கல்லறை தென்பட்டது. அதைத் திறந்து பார்த்தபோது, அதில் மனித எலும்பின் சில பகுதிகள் இருந்தன. இறந்தவருக்குத் தகுந்த மரியாதை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில், அந்த எலும்புச் சிதைவை ஒரு பெட்டியில் போட்டு, மற்றோர் இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டார். இந்த விஷயத்தை அவர் அகழாய்வுக் குழுவினரிடமும் தெரிவிக்கவில்லை.
உண்மையில் இதுபோன்று உடல் பாகங்கள் கிடைத்தால், அகழ்வாராய்ச்சி நெறிமுறைகளின்படி அவற்றை அவர் ஆராய்ந்திருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் அப்படிச் செய்திருந்தால், மாபெரும் உண்மையொன்றைக் கண்டுபிடித்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருப்பார்.
மொன்சிக்னோர் காஸ் கண்டெடுத்த அந்த உடலின் மிச்சங்கள் யாருடையவை, எந்த வகையில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.
வழிநடத்திய சீடர்: யேசு கிறிஸ்து தனக்குப் பிறகு, கிறிஸ்தவர்களை வழிநடத்தும் பொறுப்பை முதன்மைச் சீடரான புனித பீட்டரிடம் ஒப்படைத்தார். அவர் ஜெருசலேம் தொடங்கி ரோம் வரை யேசுவின் செய்தியை அறிவித்தார். மேலும், கிறிஸ்தவ மதத்தின் தலைவராகவும், முதல் போப்பாண்டவராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரோமில் இருந்தவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றியதால் கோபமடைந்த பேரரசன் நீரோ, புனித பீட்டரைத் தலைகீழாகச் சிலுவையில் அறைந்து கொன்றான். பீட்டர், வாடிகன் குன்றுப் பகுதியில் இறந்ததால் அப்பகுதியிலேயே அவருடைய உடலைக் கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்தார்கள்.
நிலத்துக்கு அடியில் கல்லறை: மரபுப்படி, முதலில் பீட்டர் உடல் வைக்கப்பட்ட இடம் கிறித்தவர்களுக்கு உரிமையானதாக இருந்தது. வாடிகன் குன்றில் ஒரு கல்லறைத் தோட்டம் இருந்தது. அந்தக் கல்லறைத் தோட்டம், அக்கால ரோம் நகரில் நன்கு அறியப்பட்ட சாலைகளுள் ஒன்றாகிய, கொர்னேலியா சாலைக்கு அருகே அமைந்திருந்தது.
பீட்டரின் கல்லறை, நிலத்துக்கு அடியில் தோண்டிக் கட்டப்பட்ட நிலவறை அமைப்பில் உருவாக்கப்பட்டது. சாலையிலிருந்து நிலத்துக்குக் கீழே இறங்கிச் செல்லும் படிகள் வழியாக அந்த நிலவறையை அடைய முடிந்தது. நிலவறையின் மையப் பகுதியில் உடலடங்கிய கல்பெட்டி இருந்தது.
‘திருத்தந்தையர் நூல்’ என்னும் தொகுப்பின்படி, மூன்றாவது போப்பாண்டவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அனகிலேத்துஸ், பீட்டருக்காகக் கட்டப்பட்ட நிலத்தடிக் கல்லறையின் மீது கல்லறை நினைவகம் ஒன்றைக் கட்டினார்.
இந்தக் கல்லறை நினைவகம், மூன்று அல்லது நான்கு பேர் முழந்தாளிட்டு ஜெபம் செய்ய வசதியாக அமைந்தது. இந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் ரகசியமாக வழிபட்டுவந்தனர். இந்தக் கல்லறையின் அருகிலேயே புனித பவுலின் கல்லறையும் இருந்தது.
கல்லறைக்கு ஆபத்து: கி.பி. 253 முதல் 260 வரை ரோமை ஆண்ட வலேரியன் என்னும் மன்னனின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது. இந்த மன்னனால், புனித பீட்டர் மற்றும் புனித பவுல் ஆகியோரின் கல்லறைகளுக்கு ஆபத்து வரும் என்று கிறிஸ்தவர்கள் பயந்தனர்.
கல்லைறயில் இருந்த புனித பீட்டர் மற்றும் புனித பவுல் ஆகியோரின் உடல் மிச்சங்களை, இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றி, இப்போது புனித செபஸ்தியார் சுரங்கக் கல்லறைத் தோட்டம் என்று அழைக்கப்படும் இடத்தில் மறைத்து வைத்தனர்.
வலேரியன் மன்னனின் ஆட்சி முடிந்ததும், பொ.ஆ (கி.பி) 260ஆம் ஆண்டில் புனித பீட்டரின் உடல் மிச்சங்கள் மீண்டும் பழைய கல்லறைக்கே கொண்டு சேர்க்கப்பட்டன. இந்த விஷயத்தில் வரலாற்று ஆய்வாளர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.
பொ.ஆ.313 ஆம் ஆண்டு முதலாம் காண்ஸ்டண்டைன் என்பவர் ரோமப் பேரரசர் ஆனதும், கிறிஸ்தவர்களுக்கு மதச்சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்கள் வழிபாட்டுத்தலங்களை அமைத்துக் கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது. இதையடுத்துப் பேரரசரின் நிதியுதவியின் மூலம் பீட்டர், பவுல் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கோயில்கள் கட்டப்பட்டன.
(தொடரும்)
> முந்தைய அத்தியாயத்தை வாசிக்க: எதற்கும் தலைவணங்காத தலைவன் - சேகுவேரா | கல்லறைக் கதைகள் 16