வாழ்வு இனிது

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 27: போர் கொடுமைகளின் சாட்சி

ஜி.எஸ்.எஸ்

ஜெனீவாவில் பார்க்க வேண்டிய மற்றோர் இடம் செஞ்சிலுவைச் சங்க அருங்காட்சியகம். ஐ.நா. அலுவலகத்திலிருந்து இது அதிக தூரமில்லை. காலை பத்து மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை இந்த அருங்காட்சியகம் இயங்குகிறது. வியாழக் கிழமைகளில் மட்டும் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும். நிரந்தரக் கண்காட்சி, தற்காலிகக் கண்காட்சி என இரண்டு வகைக் கண்காட்சிகளை வெ​வ்வேறு தளங்களில் பார்க்கலாம். தற்காலிகக் கண்காட்சியின் பொருள் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கும்.

இரண்டு விதக் கண்காட்சிகளுக்கும் தனித் தனியான கட்டணங்கள். நிரந்தரக் கண்காட்சியைக் காண அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தில் செஞ்சிலுவைச் சங்கம் செய்த சேவைகளை மட்டுமே ஆவணப்படுத்தி இருப்பார்கள் என்று நினைத்த நமக்கு வியப்பு காத்திருந்தது.

நிரந்தரக் கண்காட்சியில் மனிதாபிமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனுபவத்தை அளித்தார்கள். கண்ணியப் பாதுகாப்பு, குடும்ப உறவுகளை மேம்படுத்தல், இறப்பைத் தள்ளிப் போடுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் முறையே பிரேசில், பிரான்ஸ், ஜப்பான் நாட்டுக் கட்டிடக்கலைஞர்கள் இங்கு அரங்கங்களை உருவாக்கியிருந்தார்கள்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் இந்த அரங்குகளை ஒருங்கிணைத்துள்ளார்.

போர்களில் ஈடுபட்ட பிறகு என்ன ஆனார்கள் என்று அறிய முடியாத(உடல்கூடக் கிடைக்காத) வீரர்களின் கோப்புகளை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்! அவற்றைக் காணும்போது மனம் கனக்கிறது. அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ!

போர்க் கைதிகள் தொடர்பான ஆவணங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களின் ஒளிப்படங்களும் மனதை நெகிழ வைத்தன. அருங்காட்சியகத்தின் எந்த இடத்திலும் நேரடியாகச் செஞ்சிலுவைச் சங்கத்தின பணிகள் விளம்பரப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலிகக் கண்காட்சியில் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை உலக அமைதிக்கானவை.

1981இல் இந்த அருங்காட்சியகத்துக்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டது. 1988இல் இது பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது. தொடக்கத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அருங்காட்சியகம் என்று வைக்கப்பட்டு, பின்னர் ’சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை அருங்காட்சியகம்’ (Red Cross and Red Crescent Museum) என பெயர் மாற்றப்பட்டது. (Cross என்பது கிறிஸ்தவ மதம் தொடர்பானது என்று எண்ணிய சில இஸ்லாமிய நாடுகள் செஞ்சிலுவைச் சங்கத்தைத் தங்கள் நாடுகளில் அனுமதிக்க மறுத்த போது, அந்த இடங்களில் இந்த அமைப்பு ’செம்பிறைச் சங்கம்’ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டது). அருங்காட்சியகம் திறக்கப்பட்டபோது இந்த அமைப்பின் தலைவராக விளங்கியவர் பியரே ஹோக்.

பதேக் பிலிப் மியூசியம்

இன்றைய இளம் தலைமுறையில் கணிசமானவர்கள் கைக்கடிகாரம் கட்டுவதில்லை. அதற்கு மாற்றாக திறன்பேசி உள்ளது. நேரம் காட்ட மட்டுமல்ல அலாரம் அடிக்கக்கூட!

கடிகாரங்கள் சில நூற்றாண்டுகளாகவே மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக உள்ளன. அந்தக் கடிகாரங்களைக் கலைநயத்துடனும் கற்பனை நயத்துடன் கடந்த காலங்களில் எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஜெனீவாவிலுள்ள ‘பதேக் பிலிப் மியூசியம்’க்கு நாம் சென்றாக வேண்டும்.

(பயணம் தொடரும்)

SCROLL FOR NEXT