வாழ்வு இனிது

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 26: ஜெட் டியூ நீரூற்று

ஜி.எஸ்.எஸ்

சுவிட்சர்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது ஜெனீவா. சர்வதேச தூதரக மையமாக உள்ள ஜெனீவாவில்தான் மிக அதிக எண்ணிக்கையில் சர்வதேச அமைப்புகள் தங்கள் கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்துகின்றன. இதற்குக் காரணம் ஒன்று உள்ளது. முதல் இரண்டு உலகப் போர்களிலும் கலந்து கொள்ளாத ஒரே ஐரோப்பிய நாடு சுவிட்சர்லாந்து மட்டுமே. இத்தனைக்கும் உலகப் போர்களில் ஈடுபட்ட பல நாடுகள் சுவிட்சர்லாந்தின் அருகில்தான் இருந்தன.

ஐ.நா. தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது என்றாலும் தனது முக்கியமான அலுவலகத்தை ஜெனீவாவில் வைத்துள்ளதற்கு உலகப் போரில் சுவிட்சர்லாந்து நடுநிலை வகித்தது என்பதைத் தா​ண்டி வேறொரு காரணமும் உண்டு.

ஐ.நா. அமைப்பு சுவிட்சர்லாந்தில் ‘நாடுகளின் அரண்மனை’ (Palais des Nations) என்கிற பெயர் கொண்ட கட்டிடத்தில் இயங்குகிறது. இது பெரும் சரித்திர வரலாறு கொண்டது. ஐ.நா. அவை தோன்றுவதற்கு முன்னோடியாக விளங்கியது உலக சமாதான அமைப்பான ’லீக் ஆஃப் நேஷன்ஸ்.’ அதன் தலைமையகம் இந்த அரண்மனையில்தான் அப்போது இயங்கியது. அதன் தொடர்ச்சியாக ஐ. நா. சபையின் அலுவலகம் இங்கு இயங்குகிறது. ‘ஐ. நா. சபையின் ஐரோப்பியத் தலைமையகம்’ என்று இது அழைக்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் கட்டிடக் கலையை இந்த அரண்மனையில் காண முடிகிறது. ஆனால், நாங்கள் சென்றிருந்தபோது உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றார்கள். அங்கு வந்திருந்த ஒரு சுற்றுலாப் பயணி, 'நான்கு முறை வந்திருக்கிறேன். நான்கு முறையும் அனுமதி இல்லை’ என்று அலுத்துக் கொண்டிருந்தார். பள்ளிச் சிறுவர்கள் குழுவாக வந்தால் அனுமதி உண்டு என்று கேள்விப்பட்டோம். பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அவ்வப்போது அனுமதி மறுக்கப்படுகிறது.

வெளியில் இருந்து பார்க்கும்போது இரு புறமும் பல்வேறு நாடுகளின் கொடிகள் வரிசையாகப் பறந்து கொண்டிருக்க, பின்னணியில் கம்பீரமாகக் காணப்படுகிறது ஐ.நா. அலுவலகம். உலக சுகாதார அமைப்பு, சர்வதேச உழைப்பாளர் அமைப்பு போன்ற பலவற்றின் தலைமையகங்கள் இதில் இயங்குகின்றன.ஐ.நா. சபை அலுவலகத்துக்கு வெளியே உள்ள திறந்த மைதானத்தில் ஒரு பிரம்மாண்டமான ஃப்ளெக்ஸ் பலகை உள்ளது. அதில் பொதுமக்களின் முகங்கள் காணப்படுகின்றன. அவற்றின் கீழே ‘இவர்கள் உயிர் பிழைத்திருக்கலாம். ஆனால் குண்டு வெடிப்புகள் தொடர்கின்றன’ என எழுதப்பட்டிருந்தது.

ஜெட் டியூ: ஜெட் டியூ என்பது ஜெனீவாவிலுள்ள ஒரு மிக முக்கியமான நீரூற்று. இது ஜெனீவாவின் முக்கிய அடையாளமாக உள்ளது. ஜெனீவா ஏரி ரோன் நதிக்குள் கலக்குமிடத்தில் ஜெட் டியூ உள்ளது. இந்த நீரூற்றிலிருந்து ஒரு நொடிக்கு 500 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் வெளியேறுகிறது. சுமார் 460 அடி உயரத்துக்குப் பீய்ச்சி அடிப்பது சிறப்பு. ஏரிக் கரையில் இருந்து சிறிய பாதை ஒன்று ஏரிக்குள்ளாகச் செல்கிறது. இதன் வழியாக நடந்து ஜெட் டியூ நீரூற்றுக்கு அருகில் செல்ல முடியும். அங்கு தங்கள்மீது ஊற்றுநீர் தெறிப்பதில் பரவசம் அடைகிறார்கள்.

1886-இல் உருவாக்கப்பட்டது இந்த ​நீ​ரூற்று. 2003லிருந்து இந்த நீரூற்றைப் பார்வையாளர்கள் பகல் பொழுது கண்டு ரசிக்கலாம். பனிமூட்டம் இருந்தாலோ மிக அதிகமான காற்று வீசினாலோ மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

SCROLL FOR NEXT