கிளேசியர் அருங்காட்சியகத்தில் ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர் மட்டும் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தக் காட்சியகம் சமதளத்தில் இல்லாமல் மெல்ல மேலேறிச் செல்வதாக இருக்கிறது. உச்சியை அடையும்போது அங்கிருந்து லூசர்ன் நகரின் அழகைக் காண முடிகிறது.
இந்தப் பகுதியுள்ள ‘கிளேசியர் தோட்டம்’ பூமியின் வரலாற்றை நாம் அறிய உதவுகிறது. பாறைகள், பனிப்பாறைகள், சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்புகள் என்று பலவற்றை இங்கு காட்சிக்கு வைத்திருந்தார்கள். இரண்டு கோடி வருடங்களுக்கு முன்பு லூசர்ன் எப்படிப் பனை மரங்கள் சூழ்ந்த கடற்கரையாக இருந்தது என்பதையும் அது இன்று எப்படி மாறியுள்ளது என்பதையும் விளக்கியிருக்கும் விதம் அருமை.
இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியவர்கள் ‘அம்ரெய்ன்’ என்கிற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு காணப்படும் மலர்கள் கொள்ளை அழகு! மிக வித்தியாசமான, கண்டிப்பாக காண வேண்டிய அருங்காட்சியக அனுபவமாக இருந்தது.
லூசர்ன் நகரின் மற்றொரு குறியீடு சிங்க நினைவுச் சின்னம். இது கிளேசியர் அருங்காட்சியகத்தை ஒட்டியே இருக்கிறது. ஆறுக்குப் பத்து மீட்டர் என்கிற அளவில் படுத்து உறங்கும் பிரம்மாண்ட சிங்கமொன்று சற்று உயரத்தில் வெள்ளைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கேடயத்தையும் ஒரு முன்னங்காலையும் தலையணையைப்போல் பாவித்து ஒரு சிங்கம் தூங்குவது போல இயல்பாகவும் சிறப்பாகவும் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு குகைக்குள் இந்தச் சிங்கம் இருப்பது போல் காட்சியளிப்பது ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துவதாக இருந்தது. சுற்றிலும் அழகான ஒரு நந்தவனம்.
1821ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது இந்த நினைவுச் சின்னம். இதற்கான ’டிசைன்’ ரோம் நகரில் உருவானது. பெர்டெல் தொரவல்ட்ஸென் என்கிற பிரபல சிற்பி வடிவமைத்துள்ளார். ஆரம்ப காலக்கட்டத்தில் இதன் அருகே இயற்கையான அருவி ஒன்று இருந்துள்ளது. அது காலப்போக்கில் உலர்ந்துவிட்டதால் செயற்கை நீரூற்று ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 1792, ஆகஸ்ட் 10 அன்று பாரிஸில் நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தச் சின்னம்.
அரச விசுவாசம் கொண்ட ஆயிரம் சுவிஸ் பாதுகாவலர்கள் பிரான்ஸ் தேசத்து மன்னர் பதினாறாம் லூயியின் உயிரைக் காப்பதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள். புரட்சிக்காரர்கள் அரண்மனைக்குள் புகுந்து தங்களைத் தடுத்த இந்தப் பாதுகாவலர்களை வெட்டித் தள்ளினார்கள். அப்போது உயிர் தப்பிவிட்டார் பதினாறாம் லூயி. ஆனால் பின்னர் அவர் தன் மனைவியோடு ரகசியமாக ஒரு குதிரை வண்டியில் தப்பிச் சென்று, வழியில் ஒரு கிராமத்தில் தங்கியபோது அந்த மக்கள் இவர்களைச் சிறைப்பிடித்தனர். மன்னர்மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டார்.
அரண்மனைப் பாதுகாவலர்களில் ஒருவரான கார்ல் அல்டிஷோஃபென் அன்று விடுப்பில் இருந்ததால் உயிர்தப்பினார். தனது அத்தனை தோழர்களும் அன்று இறந்தது குறித்துக் கதறிய அவர், தனது அரசு விசுவாசிகளுக்காக ஒரு நினைவகம் கண்டிப்பாக எழுப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். அதற்குப் பலன் இருந்தது. உலகின் தலைசிறந்த சிற்பங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சுவிட்சர்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்காமல் போவதில்லை.
உலகிலேயே கல்லில் வடிக்கப்பட்ட மிக அற்புதமான நினைவுச் சின்னம் இதுதான் என்று பிரபல அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் குறிப்பிட்டதுண்டு. என்றாலும் இதைப் பார்க்கும்போது தாராசுரம், வேலூர், ஹளேபீடு போன்ற நகரங்களில் அமைந்த ஆலயச் சிற்பங்கள் நினைவுக்கு வந்தன. அவற்றில் உள்ள பல அற்புதங்களை நாம் இப்படியெல்லாம் ‘ஷோகேஸ்’ செய்யாமல் இருக்கிறோமே என்ற ஆதங்கமும் எழுந்தது!
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 20: தூண் இல்லாத பாலம்!