2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு நாள். வாஷிங்டன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி ஜெர்மானியர்களைப் பரபரப்புக்கு உள்ளாக்கியது. ‘ஜெர்மனியின் தென்மேற்கில் உள்ள ஸ்டான்டார்ஃப் கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த பிரபல இயக்குநரான F.W. முர்னாவின் (F. W. Murnau) தலையைக் காணவில்லை. அவரது கல்லறையில் மெழுகுவத்தி ஒன்று எரிந்துகொண்டிருந்ததது’ என்பதுதான் அந்தச் செய்தி.
இது சூனியக்காரர்களின் வேலைதான் என்று ஜெர்மானியர்கள் பரவலாகப் பேசிக்கொண்டனர். யார் இந்த முர்னா? அவரது தலையை ஏன் திருடிக்கொண்டு செல்ல வேண்டும்? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள ஒரு சிறிய ஃபிளாஷ்பேக்.
இன்றைய காலக்கட்டத்தில் சினிமாத் துறை மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகள், கிராஃபிக் மாயாஜாலங்கள் என நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயங்களையும் திரையில் கொண்டு வருகின்றனர். ஆனால், அந்தக் காலத்தில் குறைவான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டே, மாயாஜாலங்களைத் திரையில் காட்டிச் சாதனை புரிந்தனர் சிலர். அப்படிப்பட்ட சாதனையாளர்களில் மிக முக்கியமானவர் பெட்ரிக் வில்ஹெல்ம் முர்னா. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முர்னாவின் சாதனைகளைக் கண்டு ஹாலிவுட்டில் மட்டுமன்றி, உலக சினிமாத் துறையினர் ஆச்சரியமடைந்தனர்.
விளையும் பயிர்: முர்னாவின் ஆரம்பக்கால வாழ்க்கை சாதாரணமாகத்தான் இருந்தது. ஜெர்மன் நாட்டின் வெர்ஸ்ட்பானியா மாகாணத்தில் உள்ள பைலிப்ல்டு நகரில், 1888ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். இரு சகோதரர்கள், இரு சகோதரிகள். அவரது தந்தை ஹென்ரிச் பிளம்போ துணி உற்பத்தி ஆலையொன்றை நடத்திவந்தார்.
சிறுவயதில் இருந்தே முர்னாவுக்குக் கதை, நாடகங்களில் ஆர்வம் இருந்ததால், ஷேக்ஸ்பியர், நீட்ஷே, இப்சன் போன்ற இலக்கிய மேதைகளின் புத்தகங்களைப் படித்துவிட்டார். 12ஆவது வயதில் வீட்டிலேயே நாடகங்களை இயற்றி நிகழ்த்தவும் தொடங்கிவிட்டார்.
தேடி வந்த அழைப்பு: இந்தப் பழக்கம் அவர் கல்லூரியில் கல்வி கற்றபோதும் தொடர்ந்தது. ஒருமுறை அவரது நாடகங்களைக் கண்ட பிரபல இயக்குநர் மேக்ஸ் ரெய்ன்ஹாட், முர்னாவைத் தனது நடிப்புப் பள்ளியில் சேருமாறு அழைத்தார். பெரிய இயக்குநரின் பேச்சைத் தட்ட முடியாமல், உடனடியாக அவரது நடிப்புப் பள்ளியில் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் பிரபலமாக இருந்த நடிகர்களின் நட்பு கிடைத்தது.
முதலாம் உலகப் போர்: அந்த நேரத்தில், ஐரோப்பாவில் அசாத்திய சூழ்நிலை உருவானது. முதலாம் உலகப் போர் தொடங்கியது. ஜெர்மானியப் படையில் முர்னா சேர்ந்தார். கிழக்கு எல்லையில் நடந்த போரில் ஒரு படையின் கமாண்டராக முர்னா நியமிக்கப்பட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டு வருடங்கள் கழித்து, அவர் ஜெர்மன் விமானப்படையில் சேர்ந்தார். அவருக்கு வடக்கு பிரான்ஸ் நாட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
அந்தச் சமயத்தில், அவர் பல பேராபத்துகளைச் சந்திக்க நேர்ந்தது. எட்டு முறை அவரது விமானங்கள் விபத்துக்கு உள்ளாகின. இருப்பினும், அதிர்ஷ்டம் அவர் பக்கமிருந்து. 6 அடி 11 அங்குல உயரம் கொண்ட நபராக இருந்தாலும், பெரிய காயங்கள் அவருக்கு ஏற்படவில்லை. அதே நேரத்தில் முதலாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது.
முதல் படம்: ஜெர்மனிக்குத் திரும்பிய முர்னா தனது நண்பரும் நடிகருமான கான்ட்ரட் வெய்ட் உடன் சேர்ந்து சொந்தமாக சினிமா ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்கினார். ‘தி பாய் இன் புளூ’ எனும் மௌனப் படத்தை எடுத்து, 1919ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதன் பிறகு பிரபல கதாசிரியர் ராபர்ட் லூயி ஸ்டீவென்சன்ஸின் ‘டாக்டர் ஜெய்கில் அண்டு மிஸ்டர் ஹைட்’ எனும் படைப்பை மையமாக வைத்துக் கதைகளை உருவாக்கினார். அதன் அடிப்படையில், ஜெர்மன் படம் ஒன்றையும் எடுத்தார்.
டிராகுலா: 1922ஆம் ஆண்டு, பிரபல ஆங்கில எழுத்தாளரான பிராம் ஸ்டாக்டர் எழுதிய ‘டிராகுலா’ என்கிற நாவலை மையமாக வைத்துக் கதை ஒன்றை உருவாக்கினார். அந்தக் கதையை அப்படியே திரைப்படமாக எடுத்தார். ‘நோஸ்பெராட்’ என்று பெயரிட்டப்பட்ட அந்தத் திரைப்படம் வெளியானபோது சர்ச்சையில் சிக்கியது.
திருடப்பட்ட கதையா?: பிராம் ஸ்டாக்டரின் மனைவி, ‘நோஸ்பெராட்’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். திரைப்படம் அதன் கதை அமைப்புக்கும் தொழில்நுட்பத்துக்கும் பெயர் பெற்றாலும், வர்த்க ரீதியாக நல்ல லாபம் கிடைத்தாலும் பெரிய தர்மசங்கடத்தைச் சந்தித்தது. அதாவது, கதை திருடப்பட்டது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தது. அதனால், ‘நோஸ்பெராட்’ திரைப்படத்தின் பிரதிகள் அனைத்தும் எரிக்கப்பட்டன.
மனதளவில் முர்னா துவண்டுபோனார். இருப்பினும், சினிமாதான் வாழ்க்கை என்று நினைத்த அவர், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். அவர் ஜெயித்தாரா? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
> முந்தைய அத்தியாயத்தை வாசிக்க: அறிவுக்குக் கிடைத்த பரிசு - மேரி கியூரி | கல்லறைக் கதைகள் 11