பிறந்தது ஜெர்மனியில் என்றாலும் சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்ன் நகரில்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1902 முதல் 1909 வரை வசித்தார். இங்கிருந்துதான் உலகப் புகழ்பெற்ற ‘தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி’ உருவாக்கி, வெளியிட்டார். அவர் வசித்த வீட்டைப் பார்க்கச் சென்றிருந்தோம்.
நெருக்கமான வீடு அது. நகரின் மையப் பகுதியில் கடைத்தெருவில் அமைந்திருந்தது. இரண்டு மாடிக் கட்டிடம், தலையைச் சுற்ற வைக்கும் உயரமான மாடிப்படிகள். இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வசித்திருக்கிறார் ஐன்ஸ்டைன். வாடகைக்குத்தான் வசித்திருந்ததால் அவர் வாழ்ந்தது ஆடம்பரமான வாழ்வு அல்ல என்பது புரிந்தது. அவர் பெற்றவை சுமார் ஐம்பது காப்புரிமைகள்!
தன் மனைவி மிலேவா, மகன் ஹான்ஸ் ஆல்பர்ட் ஆகியோருடன் இந்த வீட்டில் வசித்திருக்கிறார். இங்குதான் ஹான்ஸ் பிறந்தார். அவரது தொட்டிலும் இந்த வீட்டில் காணப்பட்டது. ஐன்ஸ்டைன் பயன்படுத்திய மேசை, நாற்காலி போன்றவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். சமையலறையில் பயன்படுத்தப்பட்டிருந்த பாத்திரங்களும் அப்படியே உள்ளன.
ஐன்ஸ்டைன் தொடர்பான ஒரு சிறு கண்காட்சியும் அங்குக் காணப்படுகிறது. ஐன்ஸ்டைன் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் பெற்ற பட்டங்கள், விருதுகள் போன்றவற்றைக் காண முடிந்தது. இருபது நிமிடங்கள் ஓடிய ஒரு குறும்படத்தில் அவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் சித்திரிக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்து வெறும் 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது பெர்ன் நகரின் பிரபல ‘கிளாக் டவர்.’ பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மணிக்கூண்டு முன்னொரு காலத்தில் சிறை கட்டிடத்தின் ஒரு பகுதியாகவும் இருந்திருக்கிறது. பெர்ன் நகரத்தின் ஓர் அடையாளச் சின்னமாகவும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் தன்மையைக் கொண்டதாகவும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றதாகவும் இது உள்ளது.
கோமாளி, குதிரைகள், அரியணையில் ஒருவர் எனப் பலவித வண்ணமிகு உருவங்கள் கடிகாரத்தின் அருகில் சுழன்று கொண்டிருந்தன. கடிகாரத்தில் காணப்படுபவை பிரம்மாண்டமான அளவிலான ரோமானிய எண்கள். உள்வட்டத்தில் 12 ராசிகளின் குறியீடு. நாங்கள் அங்குச் சென்றபோது மணி 5. பலரும் அந்த மணிக்கூண்டுக்கு அருகே காத்திருந்தனர். சரியாக 5 மணி ஆனவுடன் மிக உயரத்தில் ‘ரோபாட்’ போலவே தோற்றமளிக்கும் ஒரு மனிதர் இந்த மணிக்கூண்டின் ஒரு பகுதியில் விறைப்பாக நின்று, அங்கிருந்த முரசில் தன் கையிலிருந்த ஒலி எழுப்பும் தடியால் ஐந்து முறை அடித்தார். கூட்டம் மெல்லக் கலையத் தொடங்கியது. பெர்னில் பலரும் பூனைகளை வளர்ப்பதைப் பார்க்கள முடிந்தது. சாலைகளில்கூட ஆங்காங்கே பூனைகள் நடமாடிக்கொண்டிருந்தன.
பெர்ன் நகரில் 6000 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ள கரடிக்குழி பூங்கா (bear pit) உலகப் புகழ்பெற்றது. நகரின் மையப்பகுதியில் உள்ளது. ‘பெர்ன்’ என்கிற பெயரும்கூட கரடியைக் குறிப்பதுதான். பெர்ன் நகரின் குறியீடாகவே கரடிகள் இருந்துள்ளன. இங்குள்ள பல கடைகளில் 'souvenir’ஆக கரடி பொம்மைகளை விற்கிறார்கள்.
தாங்கள் வேட்டையாடும் முதல் விலங்கின் பெயரை அந்த நகருக்கு வைப்பதாக ஐந்தாம் பெர்ட்ஹோல்டு மன்னர் தீர்மானித்தார். முதலில் அவரது கண்ணில் தென்பட்டது கரடி. எனவே நகருக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. ‘ஆரே’ (Aare) நகரின் நதிக்கரையில் அமைந்துள்ளது. ‘லிஃப்ட்’ மூலமாகக் கீழே சென்று கரடிகளைச் சற்று அருகிலும் பார்க்க முடியும்.
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 15: அசத்தலான நாடளுமன்றக் கட்டிடம்