வாழ்வு இனிது

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 9: மரங்களுக்கும் எண்கள் உண்டு!

ஜி.எஸ்.எஸ்

பாடில் (padel) என்பது சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிவரும் ஒரு விளையாட்டு. பார்த்தால் டென்னிஸ் ஆடுவது போல இருக்கும். ஆனால், நாற்புறமும் சூழப்பட்டுள்ள சுவர்களுக்கு நடுவே ஆடப்படுகிறது என்பதிலும், இதன் ராக்கெட்டில் துவாரங்கள் எதுவும் கிடையாது என்பதிலும் இது முக்கியமாக மாறுபடுகிறது. தான் பாடில் ஆடும் விளையாட்டு அரங்கத்துக்கு என்னை அழைத்துச் சென்றார் மகன்.

அரங்கு இருக்கும் பகுதியை அடைய சாலையில் இருந்து சுமார் 20 படிகள் மேலேறிச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி ஏறியதும் கண்ட காட்சி எதிர்பாராதது. மேலே பரந்து விரிந்திருந்தது திறந்தவெளி. வாக்கிங் செல்வதற்கு அழகாக இரு புறமும் பாதைகள். நடைப்பயிற்சிக்கும் ஸ்கேட்டிங்கிற்கும் மிக ஏற்ற பாதைகள். மொத்த வளாகமும் ஆறு ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 12,000 சதுர மீட்டர் திறந்தவெளிப் பகுதி.

நேரெதிராக மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது பாலஸ் டி ப்யூ​​லூ என்று அழைக்கப்படும் ஓர் அரங்கத்தின் முகப்பு.
சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான கண்காட்சிகள் இங்கு நடைபெறுகின்றன. கசிமீர் ரேமண்ட் என்பவர் எழுப்பிய இரு சிலைகள் இங்கு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. இவர் சிறந்த ஓவியர், சிற்பி, கார்ட்டூனிஸ்ட். இவர் உருவாக்கிய ஹார்வெஸ்டர் சிலை பிரபலமானது. இது டெனன்டு பூங்காவில் உள்ளது.

நான் சென்ற போது அந்த அரங்கில் நடைபெற்ற ஒரு பாலே நடன நிகழ்ச்சிக்கு ஆறு மாதங்கள் முன்பாகவே அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுவிட்டனவாம். இத்தனைக்கும் அதில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை 1,844. சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய அரங்கம் இது. சர்வதேச பாலே போட்டி இதில் நடைபெறுவது வழக்கம்.

அரங்கம் நடுநாயகமாகவும், அதற்கு முன்பு பெரும் திறந்தவெளியாகவும் இருக்க, இருபுறமும் உள்ள கட்டிடங்களில் பல்வேறு விளையாட்டுகளை ஆடுவதற்கான அரங்கங்கள் (சில மாடியிலும் அமைந்துள்ளன). ஸ்கேட்டிங் அரங்கு மிகப் பெரியதாக உள்ளது.
இந்த விளையாட்டு அரங்குகளில் ஆடுவதற்கு மணிக்கு இவ்வளவு தொகை என்று கட்டணம் செலுத்தி முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும்.

விளையாட்டரங்கில் நாம் சந்தித்த மார்க், கல்லூரிப் படிப்பை முடித்தவர். வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்.
அவரது அப்பா ஜெர்மனியையும் அம்மா ஸ்பெயினையும் சேர்ந்தவர்கள். பிறந்ததிலிருந்து சுவிட்சர்லாந்தில் வளர்பவர். தனது நாடு குறித்து மிகவும் பெருமைப்பட்டுக்கொண்டார்.

”இந்த நாடு ஐஃபிள் டவர் போன்ற எந்தச் சுற்றுலா சின்னத்தையும் கொண்டதல்ல. ஆனால் இதற்கு உரிய அழகு மகத்தானது” என்று அவர் அருகில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டினார்.

இந்த நாட்டிலுள்ள உள்ள எல்லா மரங்களுக்கும் எண்கள் உண்டு. மேயரின் பதிவேட்டில் இந்த மரம் குறித்த விவரங்கள் இருக்கும். அதை யாரும் வெட்டி எடுத்துக் கொண்டு போக முடியாது. இயற்கை வளங்கள் நிறைந்த, முக்கியமாக நீர்நிலைகள் நிறைந்த நாடு சுவிட்சர்லாந்து. பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கடி காடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். வனச்செல்வம் குறித்து விழிப்புணர்வு அவர்களுக்கு அதிகமாகிறது.

”இங்கு அரசியல் நிலைமை எப்படி?” என்கிற கேள்விக்கு, ”எங்கள் நாட்டில் ஒன்று அல்ல ஏழு பிரசிடெண்ட்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் வாக்களித்துதான் தேர்ந்தெடுக்கிறோம். அதுமட்டுமல்ல, அரசு எந்த ஒரு பெரிய தீர்மானம் எடுத்தாலும் அதை மக்கள் வாக்கெடுப்புக்கு விட்டு, அவர்கள் ஒத்துக்கொண்டால்தான் நிறைவேற்றும்.”

(பயணம் தொடரும்)

SCROLL FOR NEXT