பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஐந்து வங்கிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கூடவே அதன் துணை வங்கியல்லாத பாரதிய மகிளா வங்கியையும் இணைக்க முடிவு செய்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்த சீர்திருத்தங்களில் அரசு மும்முரமாக உள்ளதால் வங்கிகள் இணைப்புக்கான வேலைகள் சற்றே ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று தகவல் அறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
துணை வங்கிகளை இணைப்பதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் மூலதனம் ரூ.38 லட்சம் கோடியாக உயர்வதுடன், இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக அமைய உள்ளது. இணைப்புக்கு பிறகு சர்வதேச தரத்துக்கு ஸ்டேட் வங்கி வளரும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. எல்லாம் சரி, எஸ்பிஐ தனது துணை வங்கிகளை இணைத்துக் கொள்வதில்கூட எந்த கேள்விகளும் எழப்போவதில்லை. ஆனால் அதன் துணை வங்கியல்லாத பாரதிய மகிளா வங்கியை ஏன் இணைக்க வேண்டும் என்கிற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இத்தனை பிற பொதுத்துறை வங்கிகள் இருக்க பாரதிய மகிளா வங்கியை உடனடியாக இணைப்பதற்கு பின்னால் மத்திய அரசு தனிச் சிறப்பான கொள்கை முடிவு எதையும் முன்வைக்கவில்லை.
பெண்களுக்கான பொருளாதார முன்னேற் றத்தை அடிப்படையாகக் கொண்டு மிகச் சமீபத்தில் தொடங்கப்பட்டு, லாபமாக இயங்கி வருகிறது இந்த வங்கி. தவிர வங்கியின் வாராக்கடன் அளவு மிக சொற்ப சதவீதம்தான். பெண்களின் சுய முன்னேற்றம், தொழில் முன்னேற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் 7 கிளைகளுடன் தொடங்கிவைக்கப்பட்ட வங்கி, ஒன்றரை ஆண்டுகளில் 103 கிளைகளை திறந்தது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் என எல்லா வகையிலும் பாரதிய மகிளா வங்கி தனித்த அடையாளத்தை பெற்றிருந்தது.
கடந்த ஆண்டில் மார்ச் 8-ம் தேதி அன்று ஒரே நாளில் 1,000 பெண் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி அளித்தது என்கிறார் இந்த வங்கியில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர். இப்படி பல வகையிலும் தனி அடையாளத்தை கொண்டிருந்தது. 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட தனி சட்டத்தின் மூலம் இந்த வங்கி தொடங்கப்பட்டது. முதல் கிளை 2013 நவம்பர் 19 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். பெண்களுக்காக பெண்களே நடத்தும் வங்கியாக இது வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப முதலீடாக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.
வங்கி தொடங்கப்பட்ட ஐந்து மாதங்களில், 2014 மார்ச் மாதத்துக்குள் இந்தியா முழுவதும் 23 கிளைகள் திறந்தது. அடுத்த ஆண்டிலேயே 103 கிளைகளை திறந்தது. 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுக்க 771 கிளைகளை திறக்க திட்டமிட்டது. தவிர 2020-ம் ஆண்டுக்குள் ரூ.60,000 கோடி பரிவர்த்தனை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதர வங்கிகளை விட சேமிப்புகளுக்கு அரை சதவீதம் கூடுதலாக வட்டிவீதம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 4.5 சதவீத வட்டியும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சேமிப்புக்கு 5 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதர வங்கிகள் மேற்கொள்வதைப்போல சுய தொழில் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், சிறிய அல்லது நடுத்தரத் தொழில் கடன், உணவகக் கடன் என அனைத்து நடவடிக்கைகளும் இந்த வங்கி மேற்கொண்டது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. 2014-2015நிதியாண்டில் முன்னுரிமைக் கடன் ரூ.133 கோடியும், விவசாயத்துக்கு ரூ.67 கோடியும், எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.89 கோடியும், தனிநபர் கடன் ரூ.11 கோடியும் அளித்துள்ளது.
2016 மார்ச் நிதிநிலை அறிக்கையில் இந்த கடன்கள் அனைத்துமே இரட்டிபாகியுள்ளன. அதே நேரத்தில் வாராக்கடன் விகிதமும் மிகக் குறைவாகவே உள்ளது. பெண்கள் கடன் வாங்கினால் முறையாக கட்டிவிடுவார்கள். அதனால் வாராக்கடன் குறித்த பயம் இல்லை, என்கின்றனர் இந்த வங்கியில் பணியாற்றிய அதிகாரிகள். ஆனால் இந்த நோக்கங்கள் எல்லாம் இப்போது பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஆண்டுக்காண்டு சீராக வளர்ச்சி அடைந்துவந்த, லாபமீட்டும் வங்கியை இணைப்பதன் மூலம் பெண்களுக்காக குறைந்தபட்சம் வாய்ப்புகளும் அடைக்கப்படுகிறது என்றே சொல்லலாம்.
இத்தனை பெருமைகளும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு நிறைவேற்றப் பட்டுள்ளன என்பதும் பாரதிய மகிளா வங்கியின் மற்றொரு சிறப்பாகும். ஆனால் இணைப்பு நடவடிக்கைகளினால் சரிபாதி ஊழியர்கள் தங்களது பணிநலன்களை இழந்துள்ளனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளன.
வங்கி உருவாக்கத்தின்போது முதற்கட்டமாக மூத்த அதிகாரிகள் பலமும் பல்வேறு வங்கிகளி லிருந்து தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகள் அயல் பணி என்கிற அடிப்படையில் இவர்கள் பணியமர்த்தப் பட்டனர். மேலாளர், துணை மேலாளர் மட்டத் திலான அலுவலர்களை வங்கி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டும், 30 சதவீத பணியாளர்கள் நிதித்துறை சார்ந்த வெளி நிறுவனங் களிலிருந்தும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்படி மூன்று முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களில் அயல்பணி வந்தவர்கள் தவிர இதர பணியாளர்கள் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு பிறகு அவர்கள் எஸ்பிஐ வங்கியின் பணியாளர்களாக மாறிவிட்டனர். ஆனால் அயல்பணியில் வந்த உயரதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, மதிப்பீட்டின் அடிப்படையில் பணி நிரந்தர ஆணை வழங்கியிருக்க வேண்டும். இயக்குநர் குழு நியமனம் செய்யப்படாததால் இவர்களது பணி நலன் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல், மூன்று ஆண்டுகளில் தங்களது வங்கிகளுக்கே திரும்பி விட்டனர்.
இந்த மூன்று ஆண்டுகளில் இவர்களது, பணி உயர்வு ஊதிய உயர்வு உள்பட பணி நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அயல்பணிக்கு புறப்படும்போது இவர்களுக்கு கீழ் பணியாற்றி யவர்கள் தற்போது பதவி உயர்வு பெற்று மேலதி காரிகள் நிலைமையில் உள்ளனர். இது போன்ற பணி சிக்கல்களையும் தற்போது சந்திக்கின்றனர். இது தொடர்பாக நிதியமைச்சகத்திடம் முறையிட்டும் இதுவரையில் தீர்வு இல்லை என்கின்றனர். இப்போது வரையில் வங்கிக்கு இரு இயக்குநர்கள் மட்டுமே இருக்கிறார்களே தவிர இயக்குநர் குழு நியமிக்கப்படவில்லை. ‘பெண்கள் முன்னேற்றம் சார்ந்து தொடங்கப் படும் ஒரு முன் முயற்சியில் தங்களது அனுபவமும் பயன்படும் என்கிற ஆர்வத்தில்தான் அயல்பணியை ஏற்றுக் கொண்டோம். இப்போது எங்களது தனிப்பட்ட பணி நலன்களை இழந்துள்ளதுடன், மிகச் சிறப்பான நோக்கத்திலிருந்து வெளியேறி யுள்ளோம்’ என்று வருத்தப்படுகின்றனர்.
நல்லசெயல்பாட்டில், லாபபாதையில், இதர வங்கிகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டிருக்கும் பாரதிய மகிளா வங்கியை எஸ்பிஐயுடன் இணைப்பதற்கு வேறுகாரணங்கள் என்னவாக இருக்க முடியும் என்பதற்கு எவரிட மும் பதில் இல்லை அது அரசாங்கத்தின் முடிவு என்கின்றனர். முந்தைய அரசாங்கம் தொடங்கிய திட்டம் என்பதால் இந்த அரசாங்கம் மூட நினைப்பதாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.
- maheswaran.p@thehindutamil.co.in