வணிக வீதி

குறள் இனிது: முயற்சி... முடிந்த வரையா, முடியும் வரையா?

சோம.வீரப்பன்

எனது நெடுநாளைய நண்பர் ஒருவர். 40 வருடங் களுக்கு முன்பே பொறியியல் பட்டம் பெற்றவர். ஹைதராபாத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் 3 வருடங்கள் பணி செய்து பல மின்னணு நுட்பங்களைக் கற்றுக் கொண்டார்.

அவரது ஆர்வத்திற்கு, கொப்பளித்த உற்சாகத்திற்கு அந்த வேலை தீனி போடவில்லை!

எனவே கோவைக்குத் திரும்பி சொந்தமாகத் தொழில் தொடங்கினார். பெரிய மூலதனமும் போட்டுவிட்டார். ஆனால் நேர்மையான, நம்பிக்கை யான ஒருவர் கையில் தொழிற்சாலையைத் தொடங்கும் பொறுப்பைக் கொடுத்தால்தான் சந்தைப்படுத்துதல் போன்றவற்றை அவரால் கவனிக்க முடியும் என்கிற நிலை.

30 வயதான அவரோ அவருக்கு மேலதிகாரியாய் ஹைதராபாத்தில் இருந்தவர் தனக்குக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதால் அந்த பொறுப்பை அளித்தார்!

அன்பர் தொழில்நுட்பத்தில் பலே கில்லாடி! அலுவலகக் குறிப்பு எழுதினால் யாரும் அசந்து போவார்கள். கூகுள் இல்லாத காலத்திலேயே புள்ளி விபரங்களை அள்ளிக் கொட்டுவார். பெயரா, பிரகஸ்பதி என்று வைத்துக் கொள்வோமே! ஆனால் பொதுத்துறையில் அதிகாரியாகப் பணி செய்து பழகிப்போன பிரகஸ்பதிக்கு தனியார் துறையின் பணி அழுத்தங்கள் பிடிபடவில்லை. காலக்கெடுக்கள் பிடிக்கவில்லை!

எனவே, தொழிற்பேட்டையில் இடம் வாங்குவதிலிருந்து, மின் இணைப்பு, அரசாங்க அனுமதிகள் பெறுவது என ஒவ்வொன்றிலும் நீண்ட காலதாமதங்கள் ஏற்பட்டன.

பிரகஸ்பதிக்கு நடைமுறை நெளிவுசுளிவுகள் தெரியவில்லை. அவரிடம் தலைமைப் பொறுப்பிற்கு வேண்டிய பன்முகத் திறனும் (Multi tasking) இருக்கவில்லை!

எல்லா வேலைகளையும் அவர் ஒருவராகச் செய்ய முடியாதே! இப்பணிகளை மற்றவர்களைச் செய்யச்சொல்லி முடித்துக் கொள்ளும் திறமையும் பக்குவமும் அவரிடம் இல்லை! அவர் தன்னை மாற்றிக் கொள்ளவும் இல்லை!

நிறையப் பேருக்குப் பிரச்சினை இது தானேங்க!

வேலை செய்யத் தெரியும்; ஆனால், மற்றவர்களிடம் வேலை வாங்கத் தெரியாது!

தான் அறிவாளி, மேதாவி என்றெண்ணிய பிரகஸ்பதியால் சின்னச்சின்ன சிரமங்களைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியவில்லை!

ஓரிரு முறை சொல்லிப் பார்த்த நமது நண்பர், பின்னர் பிரகஸ்பதியை பணிநீக்கம் செய்து தனது நிறுவனத்தைக் காப்பாற்றிக் கொண்டார்.

‘என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்' என்று

பலர் சொல்வதை நீங்களும் கேட்டிருப்பீர்கள்.

அவர்கள் என்ன, சிறிது முயன்று பார்ப்பார்கள்.

தோற்றதும் துவண்டு விடுவார்கள்! விட்டும் விடுவார்கள்!!

ஆனால் சிலர் எவ்வளவு தடைகள் வந்தாலும் முனைப்புடன் செயல்பட்டு எடுத்த செயல் ‘முடியும் வரை' முயற்சிப்பார்கள்! வெற்றியும் பெறுவார்கள்!

ஆங்கிலத்தில் killer instinct என்பார்களே, அது போல, தடங்கல்கள் வந்தாலும் பயந்து போய் பாதியில் நிற்காமல், ‘விட மாட்டேன், விடவே மாட்டேன் எடுத்ததை முடித்தே தீருவேன்' என வைராக்கிய மனம் கொண்டவர்கள் தானேங்க பொறுப்பைக் கொடுக்கத் தகுதியானவர்கள்?

வரும் இடையூறுகளைக் களைந்து, எடுத்த செயலை முடிக்கும் திறன் உடையவனிடமே பணியை ஒப்படைக்க வேண்டுமே தவிர, நன்கு அறியப்பட்டவன் என்பதற்காகக் கூடாது என்கிறார் வள்ளுவர்.

அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று (குறள் 515)

சோம. வீரப்பன்

தொடர்புக்கு: somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT