வணிக வீதி

இனி டிஜிட்டல் கரன்ஸிகளின் காலம்!

வாசு கார்த்தி

ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து பல செய்திகள், கருத்துகள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் இந்த கட்டுரையும் கரன்ஸி பற்றியதுதான். ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாதது என அறிவித்ததற்கு, கறுப்பு பணத்தை ஒழிப்பது, கள்ளப்பணத்தை புழக்கத்தில் இருந்து ஒழிப்பது என பல காரணங்கள் சொல்லப்பட்டன. பொருளாதார வல்லுநர்கள் கூறும் இன்னொரு காரணம், ரொக்கமல்லாத பண பரிவர்த்தனையை அதிகப்படுத்த மத்திய அரசு நினைக்கிறது என்பதுதான்.

முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் ரொக்கமல்லாத பரிவர்த்தனையை சிறிதளவு உயர்த்தலாமே தவிர, முற்றிலும் அதை கொண்டுவருவது சாத்தியம் இல்லாதது. ஆனால் ஸ்வீடன் ஒரு படி மேலே சென்று டிஜிட்டல் கரன்ஸியை உருவாக்குவது குறித்து திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்வீடன் மத்திய வங்கியான ரிக்ஸ்பேங்க் துணை கவர்னர் செசிலியா கிங்ஸ்லே, பைனான்ஸியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஸ்வீடனில், கடந்த 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ரொக்க பரிவர்த்தனை 40% அளவுக்கு சரிந்திருக்கிறது. ஸ்வீடன் மக்கள் தொகையில் 97 சதவீதத்தினர் கார்டு பயன்படுத்துகிறார்கள். கடந்த ஐந்து வருடங்களாக கார்டு மூலமாக நடக்கும் பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. அதனால் இன்னும் சில ஆண்டுகளில் டிஜிட்டல் கரன்ஸியான இ-குரோனா (e-krona) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறினார். இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. இதுவே சரியான தருணம். எங்களுக்கு முன் உதாரணம் கிடையாது. நாங்கள் அறிமுகம் செய்கிறோமா இல்லையா என்பதைவிட, இது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என குறிப்பிட்டார்.

ஸ்வீடனில் நுகர்வோர்கள் 20% அளவுக்கு மட்டுமே பணத்தை நேரடியாக கையாளுகிறார்கள். மற்ற பரிவர்த்தனைகள் கார்டு உள்ளிட்ட இதர வழிகளில் நடக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் ரொக்கப் பரிமாற்றம் சராசரியாக 75% அளவில் உள்ளது.

ஆனால் எப்படி நிகழும் என்பதில் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. எப்படி இயங்கும், வழக்கமான வங்கிப்பணிகள் எப்படி நிகழும், எந்த தொழில் நுட்பம் என்னும் பல கேள்விகள் இருக்கின்றன. ஆனால் துணை கவர்னர் கூறும்போது பணத்துக்கு முற்றிலும் மாற்றாக டிஜிட்டல் கரன்ஸி இருக்காது. ரொக்கப்பணத்துக்கு இணையாக டிஜிட்டல் கரன்ஸி இருக்கும். தவிர டிஜிட்டல் கரன்ஸி உருவாக்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அது குறித்த பரிசீலனையில் இருக்கிறோம். தேவை இருக்கும் வரை நாணயங்களும், கரன்ஸியும் புழக்கத்தில் இருக்கும். அதே சமயத்தில் டிஜிட்டல் கரன்ஸிக்கான வரவேற்பு பயன்பாடு எப்படி இருக்கும் என்பதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.

மேலும் பல நாடுகள்!

ஸ்வீடன் மட்டுமல்லாமல் உலகின் மேலும் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்ஸி குறித்த பரிசீலனையில் இறங்கி இருக்கின்றன. இங்கிலாந்து, ரஷ்யா, கனடா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் டிஜிட்டல் கரன்ஸிகளுக்கான ஆரம்பகட்ட பரிசீலனையில் இருக்கின்றன. இதற்கான குழு அமைக்கப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, டிஜிட்டல் கரன்ஸியில் இன்னொரு பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனை. அப்படியான ஒரு டிஜிட்டல் கரன்ஸி உருவாக்குவது மட்டுமல்லாமல் அதற்கு சர்வ தேச அளவிலான ஒப்புதல் மற்றும்அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

`உலகம் கேஷ்லெஸ் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதனால் அரசுகள் டிஜிட்டல் கரன்ஸியை கொண்டுவருவது தவிர்க்க முடியாதது. அதே சமயத்தில் சமூகத்தில் இருந்து பணம் முற்றிலும் நீங்காது. குறைந்த மதிப்புள்ள கரன்ஸி தாள்களுக்கான தேவை இருந்துகொண்டேதான் இருக்கும்’ என ஹார்வேர்ட் பேராசிரியர் கெனத் ரோகாஃப் தெரிவித்திருக்கிறார்.

பைனான்ஸியல் டைம்ஸ் கூற்றுபடி, டிஜிட்டல் கரன்ஸியை எப்படி உருவாக்குவது என்பது குறித்த பலவிதமான கருத்துகள் இருந்தாலும், எதிர்காலம் டிஜிட்டல் கரன்ஸியில் இருக்கிறது என்பதை இந்த நாடுகள் உணர்ந்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது. இன்னும் சில வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் கரன்ஸிகளின் ஆதிக்கம் இருக்கக்கூடும்.

- karthikeyan.v@thehindutamil.co.in

SCROLL FOR NEXT