வணிக வீதி

ஜேஎஸ்டபிள்யூ பேட்டரி கார்?

செய்திப்பிரிவு

உருக்கு உற்பத்தி முதல் மின்னுற்பத்தி வரையிலான பல தொழில்களில் ஈடுபட்டுள்ள ஜேஎஸ்டபிள்யூ குழுமம் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் வாகனங் களில் அதிக செலவு பிடிக்கும் விஷயமே அதில் உள்ள லித்தியம் அயான் பேட்டரிதான். பெரும்பாலும் இத்தகைய பேட்டரிகள் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. தற்போது இந்தியாவில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மட்டுமே பேட்டரியில் இயங்கும் கார்களைத் தயாரிக்கிறது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் பேட்டரி வாகன உற்பத்தி 70 லட்சத்தை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்போது பேட்டரி கார் உற்பத்தி ஆண்டுக்கு 20 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அரசின் இலக்கை எட்டுவதற்காக பேட்டரி கார் உற்பத்தியில் ஈடுபட்டால் அரசின் உதவிகள் கிடைக்கும் என்று ஜேஎஸ்டபிள்யூ உறுதியாக நம்புகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சென்று வந்த மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்திய நிறுவனங்களின் கூட்டுடன் இத்தகைய ஆலையைத் தொடங்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்திய நிறுவனங்களை டெஸ்லா எதிர்நோக்கும் நிலையில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று திட்டமிட்டுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் பேட்டரி கார் தயாரிப்பு திட்டத்தை அமைச்சர் நிதின் கட்கரி வரவேற்றுள்ளார்.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் கடன் சுமையில் இருந்தாலும், பேட்டரி கார் தயாரிப்பு திட்டத்துக்கு மத்திய அரசின் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது. மேலும் கார் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருளான உருக்கை தங்கள் நிறுவனம் மூலம் சப்ளை செய்யலாம் என நம்புகிறது. டெஸ்லா நிறுவனத்துடன் தொழில்நுட்ப கூட்டு ஏற்படுத்துவது குறித்து ஜேஎஸ்டபிள்யூ ஆராய்கிறதா என்ற கேள்விக்கு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.

இருப்பினும் கார் திட்டப் பணியைச் செயல்படுத்துவதற்காக 8 உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை ஜேஎஸ்டபிள்யூ உருவாக்கியுள்ளது. இது தவிர ஆட்டோமொபைல் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ள சில அதிகாரிகளை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் ஜிண்டால். நிசான் நிறுவனத்தின் ஜப்பான் ஆலையில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவரும் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இதற்கான குழு அமைக்கப்பட்டு பேட்டரி கார் உருவாக்க பணி தொடங்கப்படும் என ஜேஎஸ்டபிள்யூ நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாடு முழுவதும் பேட்டரி கார்களை சார்ஜ் செய்வதற்கான மின்னேற்ற நிலையங்களை அமைப்பது தொடர்பாக மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகத்துடன் ஜேஎஸ்டபிள்யூ அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த சார்ஜிங் மையத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமே நாடு முழுவதும் அமைக்குமா என்பது தெளிவாகவில்லை. இருப்பினும் தரைவழி அமைச்சக இணையதளத்தில் 2020-ம் ஆண்டுக்குள் மின்னேற்ற மையங்கள் அமைக்க 200 கோடி டாலர் செலவிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

எப்படியிருப்பினும் டாடா குழுமத்தைப் போல பல தொழிலிலும் ஈடுபட ஜிண்டால் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட உள்ளார். அரசின் சலுகைகள், நிறுவனத்தின் தீவிர முயற்சிகள் ஒன்று சேர்ந்தால் பேட்டரி கார் திட்டம் நிச்சயம் சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது.

SCROLL FOR NEXT