வணிக வீதி

எக்ஸ்பிரஸ் சாலை

செய்திப்பிரிவு

இந்தியா பல்வேறு வளங்களை கொண்ட நாடு. ஆனால் இந்த வளங்களை சரியாக பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. புல்லட் ரயில், எக்ஸ்பிரஸ் சாலைகள் என இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருகின்றன. கடந்த பட்ஜெட்டில் கூட மத்திய அரசு சாலை மேம்பாட்டுக்கு ரூ.97,000 கோடியை ஒதுக்கியுள்ளது.

ஆனால் தொழில் வளர்ச்சியில் இந்தியா வளரவேண்டும் என்றால் சாலை வசதிகள் இன்னும் மேம்பட வேண்டும். முக்கியமாக தொழில் நகரங்களில் எக்ஸ்பிரஸ் சாலைகளை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஏற்றுமதி இறக்குமதி மேம்படும். சமீபத்தில் ஆக்ரா-லக்னோவுக்கு இடையே அதிநவீன எக்ஸ்பிரஸ் சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது போன்று பல சாலைகள் வரவேண்டும். இந்தியாவில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகள் பற்றிய தகவல்கள்….

# சாலை வசதிகள் சிறப்பாக உள்ள நாடுகளில் இந்தியாவின் இடம் 3

# இந்தியாவின் உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகளின் எண்ணிக்கை 17

# இந்தியாவில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகளின் நீளம் 1455 (தோராயமாக கிலோ மீட்டரில்).

# 2607 கிலோ மீட்டருக்கு எக்ஸ்பிரஸ் சாலைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

# எக்ஸ்பிரஸ் சாலைகளை நிர்வகிக்கும் அமைப்பு இந்திய தேசிய எக்ஸ்பிரஸ் சாலை ஆணையம். இந்த ஆணையம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

# தேசிய நெடுஞ்சாலைகளில் சிறிய சாலைகள் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் பல்வேறு வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இணையும். ஆனால் எக்ஸ்பிரஸ் சாலைகளில் இதுபோன்ற சிறிய சாலைகள் இணைப்பு இருக்காது. எந்தவித குறுக்கீடும் இல்லாமல் பயணிக்க முடியும். இது கனரக வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

# 2022-ம் ஆண்டுக்குள் 18,637 கிலோமீட்டர் நீளத்திற்கு எக்ஸ்பிரஸ் சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆக்ரா - லக்னோ

# இந்த சாலை தொடக்க விழாவின் போது மூன்று மிராஜ் 2000 மற்றும் மூன்று சுகோய் 30 ரக போர் விமானங்களும் இந்த சாலையில் தரை யிறக்கப்பட்டன. ஏதாவது நெருக்கடி நிலையின் போது (போர் காலத்தில்) இது போன்ற எக்ஸ்பிரஸ் சாலைகளில் தரையிறக்கி கொள்வதற்காகவே இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

# இந்த சாலை மூலம் ஆக்ரா- லக்னோவுக்கு இடையேயான பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 3.30 மணி நேரமாகக் குறையும்

# நீளம் 302 கிலோ மீட்டர்

# இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை 15,000 கோடி ரூபாய். ஆனால் ரூ.13,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டது.

# இந்தியாவின் மிகப் பெரிய எக்ஸ்பிரஸ் சாலை

# சாதனையாக இரண்டு ஆண்டுகளில் இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை புணே எக்ஸ்பிரஸ் சாலை

# இந்த சாலையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் மும்பையிலிருந்து புணேவுக்கு 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

# 6 லேன்களை கொண்ட இந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் சாலை.

# ரூ. 1,630 கோடி மதிப்பீட்டில் இந்த சாலை அமைக்கப்பட்டது.

# 6 சுரங்கப்பாதைகள் வழியே இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டது.

# நீளம் 93 கிலோ மீட்டர்

யமுனா எக்ஸ்பிரஸ் சாலை

# இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட எக்ஸ்பிரஸ் சாலை.

# தற்போது 6 லேன்கள் உள்ளன. இதை 8 லேன்களாகவும் விரிவுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

# இந்த சாலை அமைப்பதற்கான செலவு ரூ. 12,839 கோடி. ஜேபி குழுமம்தான் இந்த சாலையை அமைத்தது. இந்த சாலையில் டோல் ப்ரீ ஹெல்பலைன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

# நொய்டாவுக்கும் - ஆக்ராவுக்கும் இடையே இந்த சாலை போடப் பட்டுள்ளது.

# நீளம் 165 கிலோ மீட்டர்

சஹாயாதிரி மலைகள் வழியாக இந்தச் சாலை போடப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT